தமிழகத்தில் 2 வாரங்கள் முழு ஊரடங்கு, குடும்பத்திற்கு ரூ.5,000?
ஊர்க்கோடாங்கி
வெள்ளி, மே 07, 2021
கொரோனா பெருந்தொற்று பரவலை
கருத்தில் கொண்டு அன்புமணி ராமதாஸ் முன்வைத்துள்ள கோரிக்கை முக்கியத்துவம்
பெற்றுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின்
இரண்டாவது அலை நாள்தோறும் அதிர்ச்சியூட்டும் செய்திகளைத் தந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் நோயாளிகள் பாதிக்கப்படுவதால் தடுப்பூசி பயன்பாடு,
முழு ஊரடங்கு ஆகியவை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில்
புதிதாக 24,898 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 195 பேர்
பலியாகியுள்ளனர். 21,546 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
தற்போது 1,31,468 பேர்
கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் தமிழக அரசுக்கு பாமக
இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெருகி வரும் வைரஸ்
தொற்றுப் பரவலை தடுத்து நிறுத்த முழு ஊரடங்கு தான் ஒரே வழி.
அதை நடைமுறைப்படுத்த அரசு
தயங்குவது மிகப்பெரிய கடமை தவறுதல் ஆகும். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள்
உயிரிழப்பது சாதாரணமான ஒன்றாகி விட்டது. பெரும்பாலான உயிரிழப்புகளில் உண்மையான
காரணங்கள் கூறப்படுவதில்லை. ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு இதுவரை
இல்லாத அளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கு மருத்துவமனைகளில்
அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையே காரணம். ஆகையால் முழு ஊரடங்கை
அறிவித்து, அதை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். முதலில் இரண்டு
வாரங்களுக்கு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கொரோனா பரவல் சங்கிலியை
அறுத்தெறியலாம். பின்னர் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டிப்பதன் மூலம்
நிலைமை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
மூன்று வாரங்கள் மட்டும் முழு
ஊரடங்கை அமல்படுத்துவதால் பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படாது. ஊரடங்கால்
பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் முதல்கட்டமாக ரூ.5
ஆயிரம் நிதியுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று
அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின்
இன்று காலை பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
இதையடுத்து இன்று மாலை திமுக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில்
தமிழகத்தின் கொரோனா சூழல் குறித்தும், அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்,
அமைச்சர்கள் உடனடியாக செய்ய வேண்டியது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட
வாய்ப்புள்ளது. இதையடுத்து ஊரங்கு தொடர்பாக ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக