அமைவிடம் :
திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் இத்தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.
மாவட்டம் :
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம்.
எப்படி செல்வது?
தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
கோவில் சிறப்பு :
முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.
பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாமலையில் மலையே தெய்வமாகவும், உள்ளது.
இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது.
தென்னிந்தியாவிலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம்.
இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும். இது ஏகத்தை குறிக்கும். மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும்.
இது அர்த்தநாரீஸ்வரரை குறிக்கும். மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும். இது மும்மூர்த்திகளை நினைவுப்படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும்.
அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும்.
கோவில் திருவிழா :
பிரம்மோற்சவம், ஆனி மாத பிரம்மோற்சவம், மாசி மகம் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம், பரணி தீபம், மகாதீபம் ஆகிய விழாக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை :
கேட்கும் வரங்களை எல்லாம் தரும் மூர்த்தியாக அருணாச்சலேஸ்வரர் உள்ளார். கல்யாண வரம் வேண்டுவோர், குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உடல் ரீதியாக பலம் குன்றியவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள், அண்ணன்-தம்பி பிரச்சனைகள் என்று அனைத்து பிரச்சனைகளையும் போக்கும் தலம். மேலும் இந்த ஈசனை வணங்குவோர்க்கு வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும். குறிப்பாக மன அமைதி வேண்டுவோர் இத்தலத்தில் லட்சக்கணக்கில் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன் :
நேர்த்திக்கடனாக மொட்டை போட்டு முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி போடுகின்றனர்.
தானியங்கள், (துலாபாரம்) எடைக்கு எடை நாணயம், பழங்கள், காய்கனிகள், வெல்லம் ஆகியவையும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தருகின்றனர்.
சுவாமி, அம்பாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைப்பதையும் நேர்த்திக்கடனாக நிறைய பக்தர்கள் செய்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக