விமானப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக பயணி ஒருவருக்கு கோவிட் -19 இருப்பதாக கண்டறியப்பட்டால், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
கோவிட் -19 நோய் இருப்பது கண்டறியப்பட்ட பயணிகள், பயணத்திற்கு முன்னதாக கட்டணமில்லாமல், பயண தேதியை மாற்றிக் கொள்ளலாம் என நிறுவனம் சலுகையை அறிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட்டில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்த உள்நாட்டு பயணிகள், பயணம் மேற்கொள்ளும் 21 நாட்களுக்குள் கோவிட் இருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.
இந்தச் சலுகை ஒரு முறை மாற்றத்திற்கு மட்டுமே பொருந்தும். விமானம் புறப்பட திட்டமிடப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 4 மணி நேரத்திற்கு முன்னர் வாடிக்கையாளர்கள் தேதி மாற்றம் தொடர்பான கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்று SpiceJet விமான நிறுவனம் கூறியுள்ளது.
சலுகை காலத்தில் அல்லது பயணம் நிலுவையில் உள்ள காலத்திற்கு முன்பே செய்யப்பட்ட அனைத்து ஸ்பைஸ்ஜெட் விமான முன்பதிவுகளிலும் கட்டணம் இல்லா பயண தேதி மாற்ற சலுகை பொருந்தும். கூட்டாக பயணச்சீட்டு பதிவு செய்திருந்தால் என்ன ஆகும்? இந்தக் கேள்வி அனைவரின் மனதிலும் எழும்.
ஒரே ஸ்பைஸ்ஜெட் பி.என்.ஆரில் (SpiceJet PNR) பல பயணிகள் முன்பதிவு செய்திருந்தால், கோவிட் இருப்பதாக கண்டறியப்பட்ட நபருக்கு மட்டுமே கட்டணமில்லா தேதி மாற்றம் வழங்கப்படும் என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. சலுகையைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் free.change@spicejet.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடிதம் எழுதுவது அவசியம் ஆகும்.
வாடிக்கையாளர்கள் அவர்கள் மீண்டும் பயணிக்க விரும்பும் புதிய தேதியை குறிப்பிட்டு, அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். பரிசோதனை செய்வதற்காக பணம் கட்டிய ரசீது மற்றும் PDF வடிவத்தில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை அறிக்கை ஆகியவற்றை மின்னஞ்சலில் அனுப்பவேண்டும்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, கட்டணம் இன்றி பயணத் தேதி மாற்றப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக