6 வயது சிறுவனை ஊக்குவிப்பதற்காக, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைக் ரைடர்கள், பேரணியாக அந்த சிறுவனின் வீட்டை கடந்து சென்றிருக்கும் நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவன் கேன்சர் நோயை எதிர்த்து போராடி கொண்டுள்ளார். எனவே அவருக்கு ஊக்கம் அளிப்பதற்காக பைக் ரைடர்கள் ஒன்று சேர்ந்து இந்த நெகிழ்ச்சியான காரியத்தை செய்துள்ளனர்.
அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த சம்பவம் ஜெர்மனியில் நடைபெற்றுள்ளது. சிறுவனுக்கு கேன்சர் பாதிப்பு இருக்கும் தகவல், சமீபத்தில்தான் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதை அறிந்ததும் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆனாலும் அந்த சிறுவனுக்கு நம்பிக்கை அளிக்க கூடிய வேலைகளை அவரது குடும்பத்தினர் உடனடியாக தொடங்கினர்.
அந்த சிறுவனுக்கு பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே தங்கள் வீட்டிற்கு முன்னால் பைக்கில் அணிவகுக்கும்படி, பைக் ரைடர்களுக்கு சமூக வலை தளங்கள் மூலமாக அந்த சிறுவனின் பெற்றோர் வேண்டுகோள் வைத்தனர். இந்த செயல் அந்த சிறுவனை கேன்சரில் இருந்து காப்பாற்றும் என்பது அவரது பெற்றோரின் நம்பிக்கை.
அதாவது கேன்சரை எதிர்த்து போராட கூடிய தன்னம்பிக்கை அந்த சிறுவனுக்கு கிடைக்கும் என அவரது பெற்றோர் நினைத்தனர். ஆரம்பத்தில் 30-40 பேர் மட்டுமே வருவார்கள் என அந்த சிறுவனின் குடும்பத்தினர் எண்ணினர். ஆனால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைக் ரைடர்கள் அந்த சிறுவனின் வீடு முன்பு குவிந்து விட்டனர்.
இதன்பின் அவர்கள் பைக் பேரணியை நடத்தினர். ஜெர்மனியில் உள்ள சிறிய மற்றும் பெரிய பைக் கிளப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் இந்த பைக் பேரணியில் பங்கேற்று, கேன்சருக்கு எதிராக போராடும் சிறுவனுக்கு நம்பிக்கை அளித்தனர். அத்துடன் கேன்சர் பாதிப்பில் இருந்து சிறுவன் விரைவாக மீண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் வாழ்த்தினர்.
இந்த நேரத்தில் சிறுவன் விரைவாக மீண்டு வருவதற்கு நாமும் பிரார்த்தனை செய்து கொள்வோம். தற்போது சிறுவனின் வீடு முன்பாக பைக் பேரணி நடத்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் உலகம் முழுவதும் வைரலாகி வருகின்றன. அத்துடன் சிறுவனை ஊக்குவிப்பதற்காக பைக் ரைடர்கள் திரண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பைக்குகள் என்றால் நம் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். ஆனால் இளம் வயதிலேயே பைக்குகள் மீது இந்த சிறுவன் காதல் கொண்டிருப்பது பெரிய விஷயம். அத்துடன் அந்த சிறுவனின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்காக இத்தனை பைக் ரைடர்கள் ஒன்று திரண்டிருப்பது அதை விட பெரிய விஷயம். இதற்காக இந்த பேரணியில் பங்கேற்றவர்களை வாழ்த்தியே ஆக வேண்டும்.
உலகம் முழுக்க ஏராளமான பைக் கிளப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் அவ்வப்போது ஒன்று திரண்டு சவாலான பைக் பயணங்களை மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி இருக்கையில் ஒரு நல்ல காரியத்திற்காகவும் அவர்கள் ஒன்று திரண்டிருப்பது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக