Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 1 ஜூலை, 2021

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர் மாவட்டம்.

அமைப்பு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் சுவாமிமலை நான்காவது படைவீடாகும். அப்பனுக்கே பாடம் சொல்லித் தந்த சுப்பையா அருள்பாலிக்கும் அற்புத தலம் இது. மூலவர் 6 அடி உயரமாக கையில் தண்டத்துடன் தலையில் உச்சிகுடுமியுடனும், மார்பில் பூணுலுடனும் காணப்படுகிறார். 

மாவட்டம் :

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர் மாவட்டம்.

எப்படி செல்வது?

கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்கு அடிக்கடி பேருந்து போக்குவரத்து வசதி உள்ளதால் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்றடையலாம்.

கோயில் சிறப்பு :

இங்குள்ள முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

விபூதி அபிஷேகம் செய்யும்போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார்.

சந்தன அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருவார். 

கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது தெரியும். 

மூலவருக்கு எதிரில் இங்கு மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது. 

சுவாமிநாதனைக் காண நாம் அறுபது படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின் போது இந்த படிகளுக்கு செய்யப்படும் படிபூஜை மிகவும் விசேஷம். 

கோயில் திருவிழா :

திருக்கார்த்திகை, சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி விசாகப்பெருவிழா, ஆவணி பவித்ரோற்சவம், நவராத்திரிபெருவிழா, கந்தசஷ்டிபெருவிழா, திருவாதிரை, தைப்பூசப்பெருவிழா, பங்குனி வள்ளி திருக்கல்யாண விழா, இவை தவிர கிருத்திகை, மாதப்பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி, விசாகம், தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்களிலும், வாரத்தின் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் உண்டு.

பிரார்த்தனை :

திருமணவரம், குழந்தைவரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள், கல்வி, சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். சுவாமி நாதனை வழிபட்டால் நமக்கு வரும் இடையூறுகள், நோய்கள், பிராணிகள், பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் விலகுகிறது. 

நேர்த்திக்கடன் : 

மொட்டை போடுதல், சுவாமிக்கு சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திக்கடன்களாக உள்ளது. சத்ரு தொல்லை இருப்பவர்கள் திருசதை அர்ச்சனை செய்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக