Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 2 ஜூலை, 2021

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில், புதுச்சேரி.

அமைவிடம் :

மணக்குள விநாயகர் கோவில் புதுச்சேரியில் அமைந்துள்ளது. இக்கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666ஆம் ஆண்டுக்கும் முன்பே உள்ள ஒரு கோவில் ஆகும். மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது என்றறியப்படுகிறது. புதுச்சேரியின் சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. புகழ் பெற்ற விநாயகர் கோயில்களில் குறிப்பிடத்தக்கதும் ஆகும்.

மாவட்டம் :

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில், புதுச்சேரி.

எப்படி செல்வது?

புதுச்சேரி பஸ் நிலையம் சென்று, அங்கிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோயிலுக்கு வாடகைக் கார் அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டும்.

கோயில் சிறப்பு :

அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்க தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே. 

உற்சவர் வில்புருவமும், மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது. 

விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர்.

சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார். 

விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார். 

தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்கிரகம் கொண்டு செல்லப்படுகிறது.

கோயிலில் 18 அடி உயர தங்கத் தகடு வேயப்பட்ட கொடிக்கம்பம் நாட்டப்பட்டுள்ளது. இது இந்தக் கோயிலின் சிறப்புகளில் ஒன்று. 

கோயிலின் வெளிப்புறச் சுவற்றில் பல்வேறு விதமான விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தங்க விமானம் இந்தக் கோயிலின் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

கோயில் திருவிழா :

விநாயகர் சதுர்த்தி இத்தலத்தில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். அது தவிர தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, ஆனித்திருமஞ்சனம், தை, ஆடி அமாவாசை, கந்த சஷ்டி உற்சவம், விநாயகர் சதுர்த்தி, ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், மாசிமகம், மஹாசிவராத்திரி விமர்சையாக நடைபெறும்.

பிரார்த்தனை :

எல்லா விதமான பிரார்த்தனைகளும் இங்கு நிறைவேறுகின்றன. கல்யாணவரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கிறது. தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், கல்யாண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில் இந்து மதம் என்றில்லாமல் முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்களும் வெளிநாட்டினர் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன் :

இத்தலத்தில் முக்கியமாக பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள். வெள்ளித்தேர் இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக