Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 6 ஜூலை, 2021

அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம் மாவட்டம்.


அமைவிடம் :

திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் சுந்தரரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 225வது தேவாரத்தலம் ஆகும்.

மாவட்டம் :

அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம் மாவட்டம்.

எப்படி செல்வது? 

விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூரில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்து வசதிகள் உள்ளன.

கோயில் சிறப்பு :

இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூரத்தியாக அருள்பாலிக்கிறார். 

கிழவராக வந்து சுந்தரரோடு வழக்கு செய்த ஈசன் லிங்கமாக ஐக்கியமாகும் முன் கருவறைக்கு முன்பாக தான் கழற்றி வைத்த காலணி பாதுகைகள் இன்னமும் இத்தலத்தில் உள்ளது. 

இத்திருக்கோயில் திருவருட்டுறை என்ற பெயருடையது.

சுந்தரருக்கும், கிழவனாக வந்த ஈசனுக்கும் பெரியோர்களால் பஞ்சாயத்து நடந்த மண்டபம் இன்றும் உள்ளது.

இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் பொல்லாப்பிள்ளையார்.

இறைவன் சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். 

இறைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றதெனத் தலபுராணம் கூறுகிறது.

முருகன் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு மயிலோடு நடனமாடி காட்சி தந்த திருத்தலம்.

மகிசனை வதம் செய்ததால் ஏற்பட்ட ஆக்ரோசம் நீங்க நதியில் குளித்து மங்களம் பெற்ற தலம் என்பதால் மங்களாம்பிகை சந்நதியில் நந்திக்கு பதில் சிம்மம் இருக்கும். 

சங்கநிதி, பதுமநிதி, ஸ்ரீசக்கரத்துடன் சிம்ம வாகனத்துடன் அம்பாள் இங்கு இருப்பது சிறப்பு.

கோயில் திருவிழா :

ஆடி சுவாதி சுந்தரருக்கு 2 நாட்கள் திருவிழா மற்றும் பங்குனி உத்திரம் கொடி தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆருத்ரா தரிசனம், ஆவணி மூலம் புட்டு உற்சவம், கந்த சஷ்டி ஆகிய விழாக்களும் இங்கு கோலாகலமாக நடைபெறும்.

வேண்டுதல் :

இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும், வாக்கு வன்மையும், கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும், ஈசனின் அருளும் கிடைக்கும்.

இத்தலத்தில் அருள்பாலிக்கும் பொல்லாப்பிள்ளையாரை ஊமையாய் இருப்பவர்கள் வழிபட்டால் பேச்சு வரும் என்பது நம்பிக்கை. 

அம்பிகை சன்னதியில் நால்வகை எண்ணெய் நெய், இலுப்பு, தேங்காய், ஆமணக்கு நல்லெண்ணெய் ஆகியவற்றை கலக்கி ஏற்றினால் திருமண வரம், குழந்தை வரம், உத்தியோக வரம், தொழில் விருத்தி ஆகியவை கைகூடும்.

நேர்த்திக்கடன் :

சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். உலர்ந்த தூய வஸ்திரம் சாற்றலாம். நெய்தீபம் ஏற்றலாம். தவிர சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், புடவை சாற்றுதல் ஆகியவற்றையும் செய்யலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக