உலகம் முழுக்க முக்கிய பொழுது போக்கு தலமாக யூடியூப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இருக்கும் சில யூடியூப் சேனல்களுக்கு உண்மையில் கோடிக் கணக்கான பயனர்கள் சந்தாதாரர்களாக இருந்து வருகின்றனர். இந்த வரிசையில் தென்னிந்தியாவின் முதல் யூடியூப் சேனலாக 1 கோடி சந்தாதாரர்களைப் பெற்று 'வில்லேஜ் குக்கிங் சேனல்' புதிய சாதனையை உருவாகியுள்ளது.
ஒரு கோடி சந்தாதாரர்களைக் கடந்து சாதனை படைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்
வில்லேஜ் குக்கிங் சேனல் என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை படைக்க இடம், பொருள் தேவையில்லை என்பதை இந்த சேனல் அவர்களின் சமையல் கலையை மட்டும் மூலதனமாக வைத்து நிரூபித்துள்ளது. மிகப்பெரிய கனவுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனலின் பயணம் இன்று ஒரு கோடி சந்தாதாரர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
1 கோடி சந்தாதார்களைப் பெறுவது சாதாரணமான காரியமில்லை
தமிழ்நாட்டில் இருக்கும் சேனல்களில் 1 கோடி சந்தாதார்களைப் பெறுவது என்பது சாதாரணமான காரியமில்லை. இதற்காக இவர்கள் அதிகம் உழைத்துள்ளனர் என்பதே உண்மை. அதுவும் கிராமிய மண் வாசனையுடன், சுவாரசியமான கிராமத்துப் பேச்சுடன், கொஞ்சம் நகைச்சியுவையும் கலந்து இவர்கள் சமைக்கும் உணவுகளைப் பார்க்க உலகம் முழுக்க ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
யூடியூப் நிறுவனம் வழங்கிய டைமென்ட் பட்டன்
இவர்களின் அசாத்தியமான உழைப்பு, தற்பொழுது இவர்களுக்கு யூடியூப் வழங்கும் டைமென்ட் பட்டனை பெற வழிவகுத்துள்ளது. தென்னிந்தியாவின் முதல் யூடியூப் சேனலாக 1 கோடி சந்தாதாரர்களைப் பெற்ற 'வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு' யூடியூப் நிறுவனம் அசத்தலான டைமென்ட் பட்டனைப் பரிசாக வழங்கியுள்ளது. தொலைக்காட்சி பிரபலங்கள் கூட இன்னும் இந்த டைமென்ட் பட்டனை வாங்க முயன்று வரும் நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் இந்த சாதனையை படைத்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இவர்களுடன் சமைத்த அனுபவம்
இந்த வில்லேஜ் குக்கிங் எவ்வளவு பிரபலம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூறவேண்டுமென்றால், சமீபத்தில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இவர்களுடன் இணைந்து சமைத்து, சாப்பிட்டு மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் படைத்துள்ள இந்த சாதனையைப் பாராட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் அஸ்வின் Village Cooking Channelக்கு Youtube வழியாகத் தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்.
10 லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதி
இன்டர்நெட் சேவை கூட சரியாகக் கிடைக்காத கிராமத்தில் தொடங்கிய இவர்களின் பயணம், தற்பொழுது உலக முழுக்க பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் இவர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து 10 லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக