Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 21 ஜூலை, 2021

அடேங்கப்பா... ஒரே மாசத்துல இவ்ளோ முன்பதிவுகளா? டாடா சஃபாரிக்கு கிலி ஏற்படுத்தும் ஹூண்டாய் அல்கஸார்!

அடேங்கப்பா... ஒரே மாசத்துல இவ்ளோ முன்பதிவுகளா? டாடா சஃபாரிக்கு கிலி ஏற்படுத்தும் ஹூண்டாய் அல்கஸார்!

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி கார் கடந்த ஜூன் 18ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு மாத கால அளவில், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளுடனும் ஹூண்டாய் அல்கஸார் கார் கிடைக்கிறது. இதில், டீசல் இன்ஜின் மாடல்களுக்குதான் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயம் பெட்ரோல் இன்ஜின் மாடல்களையும் வாடிக்கையாளர்கள் விரும்பி முன்பதிவு செய்து வருகின்றனர்.

அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, மொத்தம் 5,600 ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்திய சந்தையில் தற்போது மூன்று வரிசை மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்திய சந்தையில் இந்த செக்மெண்ட்டில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் கார் அல்கஸார்தான்.

ஏற்கனவே இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரின் அடிப்படையில்தான் அல்கஸார் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிக இடவசதி மற்றும் வசதிகள், பல்வேறு இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் ஆகியவற்றின் மூலம் ஹூண்டாய் அல்கஸார் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.

புதிய வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி கிரெட்டாவில் இருந்து அப்கிரேட் ஆக நினைப்பவர்களையும் அல்கஸார் மூலம் ஹூண்டாய் குறிவைத்துள்ளது. ஹூண்டாயின் பெரும்பாலான போட்டியாளர்கள் பெட்ரோல் இன்ஜின் தேர்வை மட்டுமே வழங்கி வரும் நிலையில், அல்கஸாரில் டீசல் இன்ஜினையும் வழங்குவது என்ற முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

ஏனெனில் ஒட்டுமொத்த முன்பதிவுகளில் 63 சதவீத முன்பதிவுகள், ஹூண்டாய் அல்கஸாரின் 1.5 லிட்டர் சிஆர்டிஐ இன்ஜின் மாடலுக்கே கிடைத்துள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 114 ஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வும் ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காரில் வழங்கப்படுகிறது.

பிரஸ்டீஜ், பிளாட்டிணம் மற்றும் சிக்னேச்சர் என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் ஹூண்டாய் அல்கஸார் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் ஹூண்டாய் அல்கஸார் கிடைக்கிறது. வசதிகள் என எடுத்து கொண்டால், மற்ற ஹூண்டாய் கார்களை போல், அல்கஸார் எஸ்யூவியும் ஏராளமான வசதிகளை பெற்றுள்ளது.

இதில், வயர்லெஸ் போன் சார்ஜிங், ஏர் ப்யூரிஃபையர், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், ஹூண்டாய் ப்ளூ லிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகியவற்றை முக்கியமான வசதிகளாக கூறலாம். இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் டாடா சஃபாரி உள்ளிட்ட கார்களுடன், ஹூண்டாய் அல்கஸார் போட்டியிட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக