கொளுத்தும் கோடைக்காலத்தில் அதிகப்படியான தாகம் எடுப்பது என்பது சாதாரணம். வெயிலின் வெப்பத்தால் வியர்வை வழியே உடலில் இருந்து நீரானது வெளியேற்றப்பட்டு, உடல் வறட்சிக்கு வழிவகுக்கிறது. எனவே மற்ற காலங்களை விட கோடைக்காலத்தில் அதிகளவில் நீரைக் குடிக்க வேண்டியிருக்கிறது.
இது தவிர, தீவிரமான உடற்பயிற்சி மற்றும் காரமான மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதும், அதிகளவு நீரைக் குடிக்க வைக்கும். இது உடலானது குறைவான நீரால் இயங்குகிறது என்பதற்கான அறிகுறியாகும். மேலும் உடலுறுப்புக்கள் எவ்வித இடையூறுமின்றி இயக்குவதற்கு உடலில் போதுமான அளவு இருக்க வேண்டும். அதற்கு நீரை அதிகம் குடிக்க வேண்டும்.
ஆனால் எவ்வித காரணமும் இல்லாமல் நீங்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றால், அது உடலில் உள்ள ஏதோ ஒரு ஆரோக்கிய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். பொதுவாக பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நீரிழப்பு அறிகுறிகளுடன், உடல் சோர்வு மற்றும் மங்கலான பார்வை போன்றவற்றையும் சேர்ந்து சந்திக்கக்கூடும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், பின்வரும் ஆரோக்கிய பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
சர்க்கரை நோய்
எப்போது உடலில் உள்ள செல்கள் இன்சுலின் எதிர்ப்பு சக்தியாக மாறுகிறதோ, அப்போது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற சிறுநீரகங்கள் கடினமாக உழைக்கும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க கழிவறை செல்ல வேண்டியிருக்கும் மற்றும் உடலில் நீரிழப்பு ஏற்படும். இதன் விளைவாக அதிக தாகத்தை உணர நேரிட்டு, அடிக்கடி நீரைக் குடிக்கத் தோன்றும். எனவே அடிக்கடி சிறுநீர் கழிப்பதுடன், அதிகமான தாகத்தை உணர்வது ஆகிய இரண்டும் சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும்.
இரத்த சோகை
இரத்த சோகை என்பது உடலில் ஹீமோகுளோபின் தயாரிக்கப் போதுமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாத நிலையாகும். மோசமான உணவு அல்லது அதிக இரத்தப்போக்கு போன்ற பல காரணங்களால் இரத்த சோகை ஏற்படலாம். இரத்த சோகையின் பொதுவான அறிகுறி நீரிழப்பு/உடல் வறட்சி. இரத்த சோகை தீவிரமாக இருக்கும் போது, இந்த அறிகுறி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதோடு தலைச் சுற்றல், வியர்வை, உடல் சோர்வு போன்ற பிற அறிகுறிகளும் தென்படும்.
ஹைப்பர்கால்சீமியா
ஹைப்பர்கால்சீமியா என்பது உடலில் கால்சியத்தின் அளவு ஆபத்தான அளவில் அதிகரிக்கும் நிலையாகும். அதிகப்படியான பாராதைராய்டு சுரப்பிகள், காசநோய் மற்றும் புற்றுநோய் காரணமாக இந்நிலை ஏற்படலாம். இந்த ஹைப்பர்கால்சீமியாவின் முதல் அறிகுறியாக அதிகமான தாகம் இருக்கலாம். இரத்தத்தில் அதிகளவு கால்சியம் இருந்தால், அது எலும்புகளை பலவீனப்படுத்தி, சிறுநீரக கற்களை உருவாக்கக்கூடும்.
வாய் வறட்சி
எப்போது உமிழ்நீர் சுரப்பிகள் போதுமான உமிழ்நீரை சுரக்கவில்லையோ, அப்போது அதிகப்படியான தாகத்தை உணரக்கூடும். இம்மாதிரியான நிலை புற்றுநோய்க்கான மருந்துகள் அல்லது சிகிச்சைகள் அல்லது சிகரெட் போன்ற பழக்கங்களால் ஏற்படலாம். வாய் வறட்சியின் பிற அறிகுறிகளில் வாய் துர்நாற்றம், சுவை மாற்றம், ஈறுகளில் எரிச்சல் மற்றும் மெல்லுவதில் சிக்கல் ஆகியவை இருக்கலாம்.
கர்ப்பம்
கர்ப்ப காலத்தில் பல அறிகுறிகள் மற்றும் உணர்வுகள் வெளிப்படும். அதில் முதல் மூன்று மாத காலத்தில், இரத்தத்தின் அடர்த்தி அதிகரித்து சிறுநீரகங்களை அதிகப்படியான திரவத்தை உருவாக்கச் செய்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும். அடிக்கடி சிறுநீர் கழித்தால், அது உடலில் நீரிழப்பிற்கு வழிவகுத்து, நீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்காக அதிக தாகத்தை உணர வைக்கும்.
அறிந்து கொள்வோம்
,
ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக