பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் சென்னையில் விற்பனைக்கு வரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு, பெரும்பாலான நேரங்களில் முன்பதிவு ஏற்கப்படாத நிலையே காணப்படுகிறது. அதிகப்படியான வரவேற்பும், குறைவான உற்பத்தியும்தான் இதற்கு காரணம்.
எனவே உற்பத்தியை அதிகரிக்கவும், புனே நகரில் புதிய தொழிற்சாலையை அமைக்கவும் தேவையான முயற்சிகளை பஜாஜ் நிறுவனம் எடுத்து வருகிறது. ஆனால் அந்த தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவரை டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலையில் புனே, பெங்களூர், மைசூர், மங்களூர் மற்றும் அவுரங்காபாத் உள்ளிட்ட நகரங்களில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாக்பூர் தவிர, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களிலும் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய இரண்டு நகரங்களிலும் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் திட்டத்தை பஜாஜ் நிறுவனம் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது. ஆனால் அது இன்னும் நடக்கவில்லை.
நாக்பூரில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படுவது குறித்து பஜாஜ் நிறுவனம் சமூக வலை தள பதிவில் கூறியிருப்பது பின்வருமாறு: நாக்பூர் நகரில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்புவர்கள் சேத்தக் இணையதளத்திற்கு இன்றே செல்லலாம். முன்பதிவு பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வரும் 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 30 நகரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அர்பன் மற்றும் பிரீமியம் என மொத்தம் 2 வேரியண்ட்களில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது இவற்றின் விலை முறையே 1 லட்ச ரூபாய் மற்றும் 1.15 லட்ச ரூபாயாகதான் இருந்தது.
ஆனால் இடையில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை உயர்வுகளை சந்தித்தது. தற்போதைய நிலையில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அர்பன் வேரியண்ட்டின் விலை 1,42,620 ரூபாய் ஆகவும், பிரீமியம் வேரியண்ட்டின் விலை 1,44,620 ரூபாய் ஆகவும் உள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
இதன் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக பஜாஜ் சேத்தக் திகழ்கிறது. விலை அதிகம் என்றாலும் கூட, கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக