
பெட்ரோலில் இயங்க கூடிய பைக்கை, மெக்கானிக் ஒருவர் எலெக்ட்ரிக் பைக்காக மாற்றி அசத்தியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இன்றைய தேதியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னைதான் பலரின் கவலையாக உள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இதனால் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாமல், பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் பயணத்தை குறைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அல்லது ஏதேனும் ஒரு மாற்று வழியை கண்டறிந்தாக வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த செய்தி உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும்.
பெட்ரோல் விலை உயர்வு பிரச்னையில் தன்னை காத்து கொள்வதற்காக, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர், புதுமையான வழி ஒன்றை கண்டறிந்துள்ளார். வித்யாசாகர் என்ற அந்த நபர், 15 ஆண்டுகள் ஆன தனது பஜாஜ் மோட்டார்சைக்கிளை தற்போது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக மாற்றம் செய்து அசத்தியுள்ளார்.
இதற்காக பெட்ரோல் இன்ஜினை அகற்றி விட்டு, பேட்டரிகள், கன்வெர்டர் மற்றும் மோட்டார் ஆகியவற்றை அவர் பொருத்தியுள்ளார். அடிப்படையில் இவர் டிவி மெக்கானிக் ஆவார். ஆனால் பெட்ரோல் பைக்கை அவராகவே எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். வித்யாசாகருக்கு தற்போது 42 வயதாகிறது.
10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, நான்கு 30-ah 12-volt பேட்டரிகளை வித்யாசாகர் வாங்கியுள்ளார். இது தவிர 48V மோட்டார் மற்றும் கன்வெர்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய எலெக்ட்ரிக் பைக் கன்வெர்ஷன் கிட் ஒன்றையும் வித்யாசாகர் வாங்கியுள்ளார். இதற்கு தனியாக 7,500 ரூபாயை வித்யாசாகர் செலவு செய்துள்ளார்.
தேவையான பாகங்கள் அனைத்தையும் வாங்கிய பிறகு, பெட்ரோல் இன்ஜினை கழற்றி விட்டு, அதற்கு பதில் பேட்டரிகள் மற்றும் மோட்டார் ஆகியவற்றை அவர் பொருத்தியுள்ளார். இதற்கு டூவீலர் மெக்கானிக் ஒருவர் உதவி செய்துள்ளார். தற்போது இந்த பைக்கை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு வெறும் 0.2 ரூபாய் மட்டும்தான் அவருக்கு செலவாகிறது.
இது தொடர்பாக வித்யாசாகர் கூறுகையில், ''ஒட்டுமொத்தமாக நான் 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்தேன். ஆனால் தற்போது பெட்ரோல் நிரப்ப தேவையில்லை என்பதால், என்னால் ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் ரூபாயை சேமிக்க முடிகிறது'' என்றார். ஆனால் ஒவ்வொரு நாளும் சுமார் 5 மணி நேரம் இந்த பைக்கின் பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும்.
இதுவும் கூட சிரமமான காரியம் கிடையாது. இரவு நேரங்களில் சார்ஜ் செய்து கொள்ளலாம். சேமிக்கப்படும் பணத்துடன் ஒப்பிடும்போது, இது நிச்சயமாக சிரமமான காரியம் அல்ல. இங்கே மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த பைக் ஓடிக்கொண்டிருக்கும்போதே பேட்டரி சார்ஜ் ஆகும் வகையிலான வசதியை ஏற்படுத்த வித்யாசாகர் முயன்று வருகிறார்.
இதுவும் நடந்து விட்டால், சார்ஜ் செய்வதற்கு நேரம் ஒதுக்கும் சிரமமும் குறைந்து விடும். பெட்ரோல் பைக்கை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றும் முயற்சியை கையில் எடுத்து வெற்றி பெற்றுள்ள வித்யாசாகருக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அத்துடன் இதேபோன்று தங்களது பெட்ரோல் பைக்கையும் எலெக்ட்ரிக் பைக்காக மாற்றுவதற்கு பலர் திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக