மஹாராஷ்டிரா
காவல்துறையினர் மணமகள் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்த சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம். மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள போஷாரி பகுதியைச் சேர்ந்தவர் சுபாங்கி சாந்தாராம் ஜரண்டே. இவரே காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்ட மணமகள் ஆவார். 23 வயதான இவருக்கு மிக சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமண தினத்தன்று கல்யாண மண்டபத்தை நோக்கி இவர் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பயன்படுத்தியிருக்கின்றார். காருக்குள் செல்வதை விட்டுவிட்டு விநோதமான முறையில் அவர் காரின் பானட் பகுதியில் ஏறி அமர்ந்து சென்றிருக்கின்றார். இந்த செயலுக்காக அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
தனது திருமண தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்றும் நோக்கில் இளம்பெண் செய்த செயல் அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் இந்த சம்பவம் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத தினமாகவே மாறியிருக்கின்றது.
மணப் பெண் மீது மட்டுமின்றி அந்த சமயத்தில் அவருடன் மேலும் சிலர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு காட்சிப்பதிவில் ஈடுபட்ட கேமிரா மேன் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கின்றது.
சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானதை அடுத்தே மஹாராஷ்டிரா காவல்துறையினர் இந்த கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். பல்வேறு பிரிவுகளின்கீழ் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதுகுறித்து லோனி கல்போர் காவல்நிலைய முதன் காவல் ஆய்வாளர் ராஜேந்திர மோகாஷி கூறியதாவது, "ஐபிசி மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் 269 (நோய் பரப்பும் அபாயம்), 188 ( பெருந்தொற்று காலத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட விதிகளை கீழ்ப்படியாமை), 279 (வாகனம் ஸ்டண்ட்), 107 (தவறு செய்ய தூண்டுதல்), 336 (ஆபத்து விளைவித்தல்) 34 (பொதுவான நோக்கம்) ஆகிய பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது" என்றார்.
அதேசமயம், இன்னும் யாரையும் காவலர்கள் கைது செய்யவில்லை என கூறப்படுகின்றது. ஆனால், விரைவில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என காவலர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்தியாவில் வாகன ஸ்டண்டில் ஈடுபடுவது குற்றச் செயலாகும்.
குறிப்பாக, ஆபத்தை விளைவிக்கும் வகையில் பயணம் மேற்கொள்வது மற்றும் பொது சாலையில் ஸ்டண்ட் செய்வது போன்ற அனைத்தும் தண்டனைக்குரிய செயலாகும். இத்தகைய செயலில் ஈடுபட்ட காரணத்தினால்தான் காவல்துறையினர் மணமகள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக