Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

சென்னை உள்பட 25 விமான நிலையங்கள்.. பணமாக்குதல் திட்டம் மூலம் ரூ.20,782 கோடி நிதி திரட்ட திட்டம்!

 

தனியார் பங்குள்ள விமான நிலையங்களும்

சென்னை வாரணாசி உள்பட 25 விமான நிலையங்கள் பணமாக்குதல் திட்டம் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில் 20,782 கோடி ரூபாய் நிதியினை திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

அரசின் இந்த இலக்கில் வாரணாசி, சென்னை, நாக்பூர் மற்றும் புவனேஸ்வர் உள்பட 25 AAI நிர்வகிக்கப்படும் விமான நிலையங்களை அடுத்த நான்கு ஆண்டுகளில் பணமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அரசின் இந்த நிதி திரட்டல் மூலம் கிடைக்கும் தொகையை அரசு முழுமையாக, உள்கட்டமைப்பு திட்டத்திற்கு பயன்படுத்தும் என தேசிய பணமாக்கல் திட்டம் குறித்து நிதியமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.

தேசிய பணமாக்கல் திட்டம்?

அதெல்லாம் சரி அதென்ன தேசிய பணமாக்கல் திட்டம் (national monetisation pipeline)? அரசு சொத்துகள் மீது தனியார் நிறுவனங்கள் மூலம் முதலீட்டை ஈர்ப்பது தான். இதில் வரும் முதலீட்டின் மூலம் அரசு புதிய திட்டங்களையும், உள்கட்டமைப்பு திட்டங்களையும் மேம்படுத்த முடியும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தனியார் பங்குள்ள விமான நிலையங்களும்

அரசின் இந்த திட்டத்தில் ஏற்கனவே கணிசமான பங்கினை தனியாருக்கு விற்பனை செய்துள்ள மும்பை (26% பங்கு), டெல்லி (26% பங்கு), ஹைத்ராபாத் (13% பங்கு), பெங்களூர் (13% பங்கு) உள்பட சில விமான நிலையங்களும் இதில் அடங்கும். இப்போது பணமாக்குதல் திட்டம் மூலம் மொத்த விமான நிலைய சொத்துக்கள், ஏஐஐ நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த சொத்துகளில் 18% ஆகும்.

மொத்தம் எவ்வளவு?

இவ்வாறு 2022 - 25ம் ஆண்டுகளுக்கு இடையில் திரட்ட திட்டமிடப்பட்டுள்ள நிதியின் மதிப்பு 20,782 கோடி ரூபாயாகும். இந்த பணமாக்குதல் திட்டத்தில் அரசு விமான துறை உள்பட 13 துறைகளை அடையாளம் கண்டுள்ளது. இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமையன்று வெளியிட்ட 6 லட்சம் கோடி ரூபாய் இலக்கில், விமான துறையின் பங்கு 4% ஆகும்.

அரசின் இலக்கு

NMPன் அறிக்கையின் படி, இந்த பணமாக்குதல் திட்டத்தில் 25 விமான நிலையங்கள் லிஸ்டில் உள்ளன. இதில் உதய்ப்பூர், டோராடூன், இந்தூர், ராஞ்சி, கோயமுத்தூர், ஜோத்பூர், வதோதரா, பாட்னா, விஜயவாடா, திருப்பதி உள்ளிட்ட விமான நிலையங்களும் இதில் அடங்கும். இந்த 25 விமான நிலையங்களின் மூலம் நிதி திரட்டுவது அரசின் இலக்காகவும் உள்ளது.

இன்னும் லிஸ்ட் அதிகரிக்கலாம்

இதே போல சிறிய விமான நிலையங்களும் பரிவர்த்தனை அடிப்படையில் ஆராயப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆக இந்த லிஸ்டில் இன்னும் சில விமான நிலையங்களும் சேர்க்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

6 விமான நிலையங்கள் அடையாளம்

நடப்பு நிதியாண்டில் 2 மற்றும் 3ம் அடுக்கு நகரங்களான அமிர்தசரஸ், வாரணாசி, புவனேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர் மற்றும் திருச்சி ஆகிய ஆறு விமான நிலையங்களும் பணமாக்குதல் திட்டத்திற்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வளர்ச்சியினை மேம்படுத்த ஆராய்ச்சி

அதே போல லாபகரமான விமான நிலையங்களின் வளர்ச்சியினை உறுதி செய்ய, ஆறு விமான நிலையங்களிலும் சிறிய விமான நிலையங்களை இணைத்தல், குத்தகைக்கு விடப்படுவது என பல வகையிலும் வளர்ச்சியினை ஊக்குவிக்க என்ன செய்யலாம் என ஆராய்ந்து வருவதாகவும் தெரிகிறது.

AAI நிர்வாகம்

AAI தற்போதைய நிலவரப்படி 24 சர்வதேச விமான நிலையங்கள், 10 சுங்க விமான நிலையங்கள், 103 உள்நாட்டு விமான நிலையங்கள் உள்பட 137 விமான நிலையங்களை நிர்வகித்து வருகின்றது. இந்த AAI என்பது பாராளுமன்ற சட்டத்தால் உருவாக்கப்பட்ட சட்ட ரீதியிலான அமைப்பாகும். இந்த அமைப்பு தரை மற்றும் வான்வெளியில் விமான போக்குவரத்து, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பராமரித்தல் உள்ளிட்ட பல பொறுப்புகளை கொண்டுள்ளது.

கடந்த ஆண்டில் குத்தகை

கடந்த 2020 - 21ம் நிதியாண்டில் அகமதாபாத், லக்னோ மற்றும் மங்களூர், கவுகாத்தி ஜெய்ப்பூர் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட ஆறு விமான நிலையங்கள் குத்தகைக்கு விடப்பட்டது. நடப்பு ஆண்டில் அமிர்தசரஸ், வாரணாசி, புவனேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர் மற்றும் திருச்சி ஆகிய ஆறு விமான நிலையங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும், 2022 - 23ம் ஆண்டில் கோழிக்கோடு, கோயமுத்தூர், மதுரை, ஜோத்பூர்உள்ளிட்ட 8 விமான நிலையங்கள் அடங்கும்.

சென்னை எப்போது?

இதே 2023 - 2024ம் ஆண்டில் சென்னை மற்றும் வதோதரா போன்ற மிகப்பெரிய விமான நிலையங்கள் பணமாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2024 - 25ம் ஆண்டில் டேராடூன், அகர்தலா மற்றும் உதய்ப்பூர் 2024 - 25ம் ஆண்டில் எடுக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்படுள்ளது.

ஏர் இந்தியா தனியார்மயம் எப்போது?

விமான நிலையங்களை பணமாக்குதல் திட்டம் செயல்படுத்தப்படும் அதே நேரத்தில், அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கான ஏல செயல்பாட்டு முறையானது, அடுத்த மாதத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் அல்ல, டிசம்பர் மாதத்திற்குள் விமான நிலையத்தினை முழுமையாக ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பிபிசிஎல் தனியார்மயம் எப்போது?

இதேபோல நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான பிபிசிஎல் நிறுவனத்தின் பங்கு விற்பனையானது, நடப்பு நிதியண்டின் இறுதிக்குள் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏலமும் டிசம்பர் மாதத்திற்கு முடிவடையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக