
தமிழகத்தில் ஏராளமான திருட்டு சம்பவங்கள் இது வரை நடந்துள்ளது. ஆனால், இப்படி ஒரு திருட்டு சம்பவத்தை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. காரணம், திட்டம் போடாமல் ATM இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முயன்ற நபர்,ATM இயந்திரத்தின் பின்னால் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் எப்படி ATM இயந்திரத்திற்குப் பின்னாடி சிக்கிக் கொண்டார்? உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளலாம்.
பணம் எடுக்க சென்றவர் போல திருட்டில் ஈடுபட்ட 'குடி'மகன்
பணம் எடுக்க சென்றவர் போல ஆளில்லா ஏடிஎமிற்குள் புகுந்து தனது துணிச்சலைக் காட்டி இருக்கிறார் ராய் என்ற நபர் அல்லது திருடர். ATM இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முயன்றபோது, ATM இயந்திரத்திற்குப் பின்னால் இருந்த இடுக்கிற்குள் மாட்டிக்கொண்டார் என்று கூறப்படுகிறது. ராய் என்ற 28 வயது நபர் உபேந்திர பகுதியை சேர்ந்தவர். இவர் ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் பணத்தை இயந்திரத்தை உடைத்துத் திருட முயன்றிருக்கிறார். ஆனால் எப்படியோ இயந்திரத்தின் பின்னால் சிக்கிக்கொண்டார்.
ATM இயந்திரத்தின் பின்னால் சிக்கிக்கொண்ட திருடர்
இந்த நிலையில் இருந்து, அவர் தப்பிக்க அதிக நேரம் சத்தமில்லாமல் போராடியிருக்கிறார். இருப்பினும் அவரால் வெளியில் வர முடியவில்லை. இதனால், அவர் பதட்டம் அடைந்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத ATM என்பதனால் யாருக்கும் இவர் ATM இயந்திரத்தின் பின்னால் சிக்கிக்கொண்டது தெரியவில்லை. சரி, வந்த வேலையை நிறைவேற்றுவோம் இருக்கும் சிக்கலைப் பற்றி பிறகு யோசிக்கலாம் என்று சிக்கிக்கொண்ட ராய் ATM இயந்திரத்தில் இருந்து பணத்தைத் திருட முயன்றிருக்கிறார்.
குடிபோதையில் நடந்த சம்பவம்
ராய் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ராய் ஏடிஎம் இயந்திரத்தின் பின்புற சுவரில் ஒட்டப்பட்ட ஒட்டு பலகையை அகற்றி இயந்திரத்தின் பின்புறத்தை அடைந்திருக்கிறார். ஆனால், அவர் இயந்திரத்தை உடைக்க முயன்றபோது, அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு மோகனூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வந்த போது, சுவர் மற்றும் ஏடிஎம் இயந்திரத்திற்கு இடையில் சிக்கியிருந்த நபரை போலீசார் மீட்டு, கைதும் செய்துள்ளனர்.
கைது
ராய் பீகாரின் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் வசிப்பவர் என்றும், நாமக்கல் மாவட்டம் பரளியில் உள்ள ஒரு கோழி தீவன உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அடுத்த நாள், ராய் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அவர் தற்போது நாமக்கல் துணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராய் ATM இயந்திரத்திற்குப் பின்னால் இருந்து வெளிவரும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக