
ஆன்லைன் டாக்ஸி புக்கிங் சேவை பிரிவில் இந்தியாவிலேயே முன்னோடியாக இருக்கும் ஓலா நிறுவனம், சில வருடங்களுக்கு முன்பு எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனத்தை வாங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா அறிமுகம் செய்து அதன் விலை மற்றும் டெலிவரி தேதியை அறிவித்துள்ளது.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகத்தின் போது ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க்-கிற்கு அறிவுரை கூறியுள்ளார்.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்-ன் முன் அறிமுக நிகழ்வில் பேசிய ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் நிலையான வர்த்தகப் புரட்சியை உருவாக்க வேண்டும். இதேபோல் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பான ஈகோசிஸ்டத்தையும் உருவாக்க வேண்டும் எனப் பேசினார்.
இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்
இந்த நிகழ்ச்சியில் டெஸ்லா இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களுக்கு வரிக் குறைப்பு கோரிக்கையைக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பாவிஷ் அகர்வால், இந்தியாவில் வாகனத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்.
பாவிஷ் அகர்வால் வரவேற்பு
இதைத்தொடர்ந்து பாவிஷ் அகர்வால், எலான் மஸ்க்-ஐ நான் இந்தியாவிற்கு வரவேற்கிறேன்.. போட்டி எப்போதும் நல்லது தான். எலான் மஸ்க் இந்தியாவிற்கு வருவதன் மூலம் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும், அதன் வர்த்தகத்திலும் மாபெரும் புரட்சி உருவாகும். இந்தப் புரட்சி அனைவருக்கும் நல்லது எனப் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஓலா ஸ்கூட்டர் விலை இதுதான்
இந்த முன் அறிமுக விழாவில் பாவிஷ் அகர்வால் ஓலாவின் S1 ரக ஸ்கூட்டர் 121 கிலோமீட்டர் வேகம் கொண்ட வண்டியின் விலையானது 99,999 ரூபாயாகும். இதே 181 கிலோமீட்டர் வேகம் கொண்ட ப்ரோ வாகனத்தின் விலை 1,29,999 ரூபாயாகவும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
75வது சுதந்திர தினம்
ஒலா தனது சிறப்பு மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 75வது சுதந்திர தினத்தில் இந்த ஸ்கூட்டரானது வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் ஸ்கூட்டர் புக்கிங்-கிற்காகத் திறக்கப்பட்ட போது 24 மணிநேரத்தில் 1,00,000 வாகனங்கள் புக்கிங் பெற்றது குறிப்பிடத்தக்கது.
எலக்ட்ரிக் வாகனங்கள் மீது விருப்பம்
இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் கார், பைக் மீதான மக்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒலா முதல் முறையாக அறிமுகம் செய்யும் எலக்ட்ரிக் வாகனத்திற்கு அதிகளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் இதன் விலை மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
1000 நகரங்களில் புக்கிங் & டெலிவரி
இந்தியாவில் சுமார் 1000 நகரங்களில் புக்கிங் செய்யப்பட்டு உள்ள காரணத்தால் மக்கள் மத்தியில் ஓலா பிராண்டை பெரிய அளவில் கொண்டு சேர்க்கும் விதமாக ஓலா 1000 நகரங்களிலும் டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 8ல் இருந்து பைக்குகளைப் பெறலாம் என ஓலா அறிவித்துள்ளது.
வரிச் சலுகை
அக்டோபர் மாதத்தில் இருந்து தொழிற்சாலையில் இருந்து வாகனங்கள் விற்பனை செய்யப்படும் இடத்திற்கு டெலிவரி செய்யத் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓலா வாகனத்திற்கு விலையில் மத்திய மாநில அரசு அளிக்கும் வரிச் சலுகை சேர்க்கப்படாமல் உள்ளது.
டெஸ்லா கோரிக்கை
எலான் மஸ்க்-கிற்குப் பாவிஷ் அகர்வால் ஏன் அறிவுரை கூறினார்.
உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசிடமும், நித்தி அயோக் அமைப்பிடமும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
டெஸ்லா-வுக்கு வரவேற்பு
இந்தியாவில் டெஸ்லா தனது கார்களை நேரடியாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட போது மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுமட்டும் அல்லாமல் 2021க்குள் விற்பனையைத் துவங்கத் திட்டமிட்டுள்ள டெஸ்லா நிறுவனம், சீனா அல்லது அமெரிக்காவில் தொழிற்சாலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அதை இந்திய சந்தையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
வரியை 40% குறைக்க வேண்டும்
இதற்காகவே எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்கள் மீதான இறக்குமதி வரியை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று இந்நிறுவன சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இருக்கும் வரி விதிப்பு
இந்தியாவில் தற்போது இறக்குமதி செய்யப்படும் கார்களின்
(Fully built car) விலை 40,000 டாலருக்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் 60 சதவீத வரியும், 40,000 டாலருக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது.
டெஸ்லாவின் கோரிக்கை
இந்நிலையில் டெஸ்லாவின் கோரிக்கைக்குப் பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியைக் குறைக்க எந்தத் திட்டமும் இல்லை எனப் பதில் அளித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தை
டெஸ்லா மட்டும் அல்லாமல் அனைத்து முன்னணி வெளிநாட்டுக் கார் நிறுவனங்களும் வரியை குறைக்க அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்நிலையில் அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் இந்தக் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்தால் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வர்த்தகப் பாதிப்பு அடைவது மட்டும் அல்லாமல் நாட்டின் உற்பத்தியும், வேலைவாய்ப்பும் குறையும்.
மோடி அரசு
மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவீட்டை அதிகரிக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகளவிலான வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க வாய்ப்பு இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக