இன்று அனைத்து தரப்பினரும் தங்களது முதலீட்டையும், பணத்தை ஓரே இடத்தில் முதலீடு செய்யக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கும் காரணத்தால், தான் வர்த்தகம் செய்யும் துறையைத் தாண்டி பிற துறைகளில் அல்லது பிற முதலீட்டுப் பிரிவுகளில் முதலீடு செய்து வருகின்றனர்.
டெஸ்லா முதலீடு
இதற்குப் பெரிய உதாரணம் டெஸ்லா, எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனம் தனது உற்பத்தி, தொழில்நுட்பம், பேட்டரி ஆகியவற்றில் பெரும் முதலீடு செய்து தொடர்ந்து மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வந்தாலும், டெஸ்லா தலைவர் எலான் மஸ் கிரிப்டோகரன்சியைத் தனது நிறுவனத்தின் முக்கியப் பேமெண்ட் ஆக மாற்ற வேண்டும் என நோக்கத்தில் உள்ளார்.
பிட்காயின், டோஜ்காயின் முதலீடுகள்
இதற்காகப் பிட்காயின், டோஜ்காயின் போன்ற பல கிரிப்டோகரன்சியில் தனிப்பட்ட முறையிலும், டெஸ்லா நிறுவனத்தின் வாயிலாக முதலீடு செய்து வருகிறார். இதற்கு அவர் கூறும் பேமெண்ட் துறையின் எதிர்காலம் கிரிப்டோகரன்சி தான் என எலான் மஸ் கூறுகிறார்.
அமெரிக்காவின் பளான்டிர் நிறுவனம்
டெஸ்லாவுக்கு எப்படிக் கிரிப்டோகரன்சி முற்றிலும் மாறுபட்ட துறை முதலீடோ, இதேபோல் தான் அமெரிக்காவின் முன்னணி டோட்டா அனலிட்டிக்ஸ் சேவை நிறுவனமான பளான்டிர்-க்குத் தங்கம். Palantir நிறுவனத்திடம் இருக்கும் உபரி நிதித் தொகையில் சுமார் 50 மில்லியன் டாலர் தொகைக்குத் தங்க கட்டிகளை ஆகஸ்ட் மாதம் வங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
டேட்டா அனலிட்டிக்ஸ் சேவை
Palantir நிறுவனம் ஒரு மென்பொருள் நிறுவனம் அதுவும் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் டேட்டா அனலிட்டிக்ஸ் சேவை பிரிவில் முன்னோடியாக விளங்கும் ஒரு நிறுவனம் தங்கம் மீது முதலீடு செய்ய என்ன காரணம்..? இந்நிறுவன தலைவர் தான்.
பீட்டர் தியேல் - எலான் மஸ்க்
பளான்டிர் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் பீட்டர் தியேல், இவர் வேறு யாரும் இல்லை எலான் மஸ்க் உருவாக்கிய நிறுவனத்தில் முதலீடு செய்து நீண்ட காலம் அவருடன் பயணித்தவர். வர்த்தக உலகில் பேபால் மாபியா என்ற ஒரு சொல் கேட்டு இருந்தால், அதற்கு விதை போட்டவர் தான் இந்தப் பீட்டர் தியேல்.
பொருளாதாரம் நிலையற்ற தன்மை
பீட்டர் தியேல் தலைவராகவும், அலெக்ஸ் கார்ப் சிஇஓ-வாக இருக்கும் பளான்டிர் நிறுவனம் தனது, நிதி ஆதாரங்களைப் பல மாறுபட்ட முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்திருந்தது. தற்போது வர்த்தகமும், பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் இருக்கும் காரணத்தால் பாதுகாப்பான தளத்தில் முதலீட்டை மாற்ற வேண்டும் என நோக்கில் பளான்டிர் நிறுவனத்தின் நிதி ஆதாரங்கள் தங்கம் மீது திருப்பப்பட்டு உள்ளது.
கொரோனா காலத்தில் தங்கம் உச்சம்
தங்கம் விலை கடந்த ஆண்டுக் கொரோனா தொற்று உச்சத்தைத் தொட்ட போது யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல் முறையாக 2000 டாலரை தொட்டது. இந்த வருடம் உலக நாடுகளில் பணவீக்கம் பெரும் ஆபத்தாகப் பேசப்பட்டு வரும் நிலையில், பணவீக்கத்தின் பாதிப்புகளைக் குறைக்கத் தங்கம் முக்கியக் காரணியாக இருக்கும். ஆனாலும் இந்த ஆண்டுத் தங்கம் விலை என்பது 7 சதவீதம் குறைந்துள்ளது.
100 அவுன்ஸ் தங்க கட்டிகள்
இதன் அடிப்படையில் பளான்டிர் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் 100 அவுன்ஸ் கட்டிகளாகச் சுமார் 50.7 மில்லியன் டாலர் தொகைக்கு வாங்கியுள்ளது. இந்தத் தகவலை ஆகஸ்ட் மாதம் வெளியான ஜூன் காலாண்டு முடிவில் பளான்டிர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பளான்டிர் நிறுவனத்தின் தங்கம்
தற்போது பளான்டிர் நிறுவனம் வாங்கிய தங்க கட்டிகள் அனைத்தும் 3ஆம் தரப்புப் பாதுகாப்பு இடத்தில் தான் உள்ளது. இதை நேரம் பார்த்து போதுமான பாதுகாப்புகள் ஏற்பாடு செய்த பின்பு பளான்டிர் நிறுவனத்திற்குச் சொந்தமான பாதுகாப்பு தளத்திற்கு மாற்றப்படும் என அறிவித்துள்ளது பளான்டிர் நிறுவனம்.
கிரிப்டோகரன்சி-யில் முதலீடு
இவை அனைத்தையும் தாண்டி பளான்டிர் நிறுவனம் தனது உபரி நிதி ஆதாரங்களை இனி வரும் காலத்தில் கிரிப்டோகரன்சி சந்தையிலும் முதலீடு செய்ய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி மே மாதம் நடந்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடனில்லா நிறுவனம்
நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பின்பு பளான்டிர் நிறுவனம் கடனில்லா நிறுவனமாக உயர்ந்துள்ளது. இதேபோல் கடந்த 2 காலாண்டுகளான பளான்டிர் நிறுவனம் சிறப்பான வர்த்தக வளர்ச்சி அடைந்து வருவதாக அறிவித்துள்ளது. இதே காலக்கட்டத்தல் சுமார் 20 புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக விரிவாக்கம்
பளான்டிர் நிறுவனம் தற்போது வேகமாக வளர்ச்சி அடையும் பாதையில் இருக்கும் காரணத்தால் வளர்ச்சி திட்டத்திலும், வர்த்தக விரிவாக்கத்தில் வழக்கத்தை விடவும் சற்று அதிகமாக முதலீடு செய்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனத்தில் சேல்ஸ் பிரிவில் சுமார் 100 ஊழியர்கள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காக்னிசென்ட் நிறுவனம்
இதேவேளையில் இந்தியா மற்றும் உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனம் தனது வர்த்தக விரிவாக்கத்திற்காக ஹண்டர் டெக்னிக்கல் ரிசோர்ஸ் நிறுவனம் வைத்திருந்த டிஜிட்டல் இன்ஜினியரிங் சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளது.
ஹண்டர் டெக்னிக்கல் ரிசோர்ஸ்
ஜார்ஜியா அட்லாண்டா பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹண்டர் டெக்னிக்கல் ரிசோர்ஸ் நிறுவனம் டிஜிட்டல் இன்ஜினியரிங் மற்றும் பிராஜெக்ட் மேனேஜ்மென்ட் ஏஜென்சியை வைத்துள்ளது. இவ்விரு சொத்துகளையும் அறிவிக்கப்படாத தொகைக்கு கைப்பற்றியுள்ளது.
6 நிறுவனங்கள் கைப்பற்றல்
2021ஆம் ஆண்டில் மட்டும் காக்னிசென்ட் நிறுவனம் சுமார் 6 நிறுவனங்களை இதுவரை கைப்பற்றியுள்ளது. தற்போது ஐடி நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் புதிய கட்டமைப்பை உருவாக்குவதை விடவும் ஏற்கனவே இருக்கும் நிறுவனத்தைக் கைப்பற்றுவதை விரும்புகிறது.
இந்திய ஐடி ஊழியர்கள்
காக்னிசென்ட் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும், இந்நிறுவனத்தின் பெரும் பகுதி ஊழியர்கள் இந்தியாவில் தான் உள்ளனர். இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற அளவு அதிகமாக இருக்கும் காரணத்தால் சமீபத்தில் ஊழியர்களுக்குப் பதவி உயர்வு, போனஸ் ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக