
மின்சார வாகனங்களுக்கான இலவச மின்சார சார்ஜிங் திட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்த மேலும் முழுமையான தகவலைக் கீழே காணலாம், வாங்க.
உலகம் முழுவதிலும் மின் வாகன ஊக்குவிப்பு மிக அமோகமாக நடை பெற்று வருகின்றது. இந்தியாவிலும் இந்த மாதிரியான நடவடிக்கைகள் மிகவும் செம்மையாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில், மானியம் வழங்குதல், வரி மற்றும் பதிவு கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மாநிலத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இலவச மின் வாகன சார்ஜிங் மையங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. இந்த சிறப்பு செயல்பாட்டையே மிக விரைவில் அம்மாநில அரசு முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, இலவச மின் வாகனங்களை சார்ஜ் செய்யும் திட்டத்திற்கு கேரள அரசு முற்று புள்ளி வைக்க இருக்கின்றது. இன்னும் இரு வாரங்களில் இலவச மின் வாகன சார்ஜிங் திட்டம் நிறுத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட இருக்கின்றது. ஒரு யூனிட்டிற்கு ரூ. 15 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க ஒன்றிய அரசு தொடங்கி நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில், அண்மையில் மாபெரும் தொகையை மானியமாக குஜராத் அரசு அறிவித்தது. இந்த மாதிரியான சூழ்நிலையில், கேரள அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை மின் வாகன பிரியர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலவச மின் வாகன சார்ஜிங் திட்டம் இன்னும் இரு வாரங்களில் முடிவிற்குக் கொண்டு வரப்பட இருப்பதாக மாநிலத்தின் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஒரு யூனிட்டிற்கு ரூ. 15 வரை வசூலிக்கப்படும் என்றும் அது அறிவித்திருக்கின்றது. இதுகுறித்து மாநிலத்தின் முக்கிய அதிகாரிகள் தெரிவித்தாவது, "இலவச மின் வாகன சார்ஜிங் திட்டமானது ஓர் சோதனையோட்டமாகவே மேற்கொள்ளப்பட்டதாக" கூறியுள்ளனர்.
மூன்று மாதங்கள் வரை மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம் தற்போது நிறைவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள மின் வாகனங்களைக் கண்டறிய உதவுவதற்கான செல்போன் செயலியை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. 'Electrify' எனும் அந்த செயலி சந்து-பொந்து-இடுக்கு என எங்கிருந்தாலும் மின் வாகன சார்ஜிங் மையங்களைக் காட்டிக் கொடுக்கும்.
மாநிலத்தின் முக்கிய நகர் பகுதிகளான திருச்சூர், கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் மட்டுமே மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் மிக அதிகளவில் மின் பயன்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அதேவேலையில் திருவனந்தபுரத்தில் மிகக் குறைவான அளவிலேயே மின் வாகன பயன்பாட்டாளர்கள் சார்ஜிங் மையங்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
கமிஷன் அல்லாத நிலையில் ஓர் யூனிட்டிற்கு கட்டணம் ரூ. 5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் சர்வீஸ் சார்ஜ் உள்ளிட்டவைச் சேர்த்து ரூ. 15 யூனிட்டிற்கான கட்டணம் ஆகும். மாநிலத்தின் மேலும் சில முக்கிய நகர்புறங்களில் அரசு மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
அந்தவகையில் புதிதாக 25 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் கட்டமைக்கப்பட இருக்கின்றன. கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் வாயிலாக மாநிலத்தில் மின் வாகன பயன்பாட்டாளர்கள் கணிசமாக அதிகரித்திருக்கின்றனர். அந்தவகையில், ஆகஸ்டு 16ம் தேதி வரையில் மாநிலத்தில் 3,313 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக நடப்பாண்டின் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் அதிகளவில் மாநிலத்தில் மின் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் 631 யூனிட்டும், ஜூலையில் 668 யூனிட்டுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இலவசமாக அறிவிக்கப்பட்ட மின் வாகன சார்ஜிங் திட்டத்திற்கு மாநில அரசு அதிரடியாக முற்று வைத்திருக்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக