
உலக ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பெல்ஜிய போலீஸ் புதிய பாதுகாப்பு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மிக முக்கியமானது என்பதனால், பதிவை முழுமையாகப் படியுங்கள். வரப்போகும் ஆபத்தில் இருந்து உங்களையும் உங்கள் ஸ்மார்ட்போனையும் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பெல்ஜியம் போலீஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி கூகிள் பிளே ஸ்டோரில் இருக்கும் 8 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களில் ஜோக்கர் வைரஸ் மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மீண்டும் உலகளவில் தாக்குதலைத் தொடங்கியுள்ள 'ஜோக்கர் மால்வேர்'
'ஜோக்கர் மால்வேர்' என்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைரஸ் மீண்டும் தனது தாக்குதலை உலகளவில் தொடங்கியுள்ளதாக பெல்ஜியம் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் மூலமாகப் பயனரின் ஸ்மார்ட்போன் தகவலைத் திருடி, அந்த பயனரின் கிரெடிட் மற்றும் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் சூறையாடும் மிக மோசமான மால்வேர் தான் இந்த ஜோக்கர் வைரஸ் என்று பெல்ஜியம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
உலக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை
சமீபத்தில் ஜோக்கர் மால்வேர் காணப்பட்ட 8 ஆப்ஸ்களின் பட்டியல் தற்போது பெல்ஜியம் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது. அழிவே இல்லாமல் நீண்ட நாட்களாகத் தொடர்ச்சியான வைரஸ் தாக்குதலை ஏற்படுத்தி வரும் மோசமான ஜோக்கர் மால்வேர், ஆண்ட்ராய்டு சாதனங்களைத் தாக்கி அதன் பயனர்களை மோசடி செய்து வருகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள பல்வேறு செயலிகளில் தன்னை மறைத்து வைத்து இந்த மால்வேர் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கணிசமாக உயரும் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்
இதற்கு முன்னர் கூட, இதே போன்ற தாக்குதலை வேறு சில ஆப்ஸ்கள் மூலம் ஜோக்கர் மால்வேர் செய்த போது, அதைக் கூகிள் நிறுவனம் அடையாளம் கண்டு தனது பிளே ஸ்டோரில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை நீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஜோக்கர் மால்வேரின் தாக்குதல்கள் இன்னும் குறைந்தபாடில்லை. கடந்த சில ஆண்டுகளில் ஜோக்கர் மால்வேரின் தாக்குதல் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது என்று ஒரு அறிக்கை தகவல் தெரிவிக்கிறது.
ஜோக்கர் மால்வேர் என்றால் என்ன? அது எவ்வளவு ஆபத்தானது?
ஜோக்கர் மால்வேர் பற்றித் தெரியாதவர்களுக்கு, இது தொடர்ச்சியாக ஆண்ட்ராய்டு சாதனங்களைக் குறிவைக்கும் மோசமான மால்வேர்களில் ஒன்றாகும். இது முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. குயிக் ஹீல் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த மால்வேர் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள எஸ்எம்எஸ், காண்டாக்ட் லிஸ்ட், சாதனத் தகவல், ஓடிபி போன்ற பலவற்றை உள்ளடக்கிய பயனர்களின் தரவை திருடும் வைரஸ் இதுவாகும்.
ஜோக்கர் மால்வேர் என்ன தீங்கை விளைவிக்கும்?
உங்கள் வங்கி கணக்கில் அல்லது உங்கள் கிரெடிட் கார்டில் மாத இறுதியில் ஒரு பெரிய ஆச்சரியத்தை நீங்கள் ஆபத்தாக உணரக்கூடிய வகையில் இந்த மால்வேர் செயல்படுகிறது. இந்த மால்வேர் தாக்குதல் நடத்தும் ஸ்மார்ட்போனுடன் அதன் பயனரின் வங்கி கணக்குடன் தொடர்பு கொண்டு அவர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று பெல்ஜிய போலீசார் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு பயனருக்குப் பணம் செலுத்தும் சேவைகளுக்கான பிரீமியம் சந்தாவை இது தானாகவே ஆக்டிவேட் செய்கிறது. பயனரின் அனுமதி இல்லாமல் இந்த வைரஸ் இதைச் செய்கிறது.
ஜோக்கர் மால்வேர் பயனரின் பணத்தை எப்படி சுரண்டுகிறது?
இந்த வைரஸ் பயனரின் அனுமதியின்றி பணம் செலுத்தும் சேவைகளுக்குச் சந்தா செலுத்தும் திறன் கொண்டது என்பதனால், பிரீமியம் சந்தாவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டது என்பதை நீங்கள் அறிய சில காலம் எடுத்துக்கொள்ளும். உங்களின் வங்கி கணக்கின் இருப்பை சோதனை செய்து பார்க்கும்போது மட்டுமே அதை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். இப்போது, இதே போன்ற ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்ட 8 ஆப்ஸ்களை கூகிள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் அடையாளம் கண்டுள்ளது.
கூகிள் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன?
இந்த தீங்கிழைக்கும் 8 பயன்பாடுகளும் தற்பொழுது கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து முற்றிலுமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கூகிள் பிளே ஸ்டார் பட்டியலில் இருந்து டெலீட் செய்யப்பட்டுள்ளது. தீம்பொருள் குறித்து தகவல் கிடைத்ததும் கூகுள் விரைந்து இந்த ஆப்ஸ்களை பிளே ஸ்டோரிலிருந்து அகற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களிலிருந்து இந்த பயன்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று கூகிள் கூறியுள்ளது.
ஜோக்கர் மால்வேர் தாக்குதலில் இருந்து இப்போது தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
பெல்ஜிய அதிகாரிகளின் சமீபத்திய எச்சரிக்கை காட்டுவது போல், பயனர்கள் இந்த ஆப்ஸ்களில் மால்வேர் ஒளிந்திருப்பது தெரியாமல் தங்கள் சாதனங்களில் வைத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளது. இதனால், அப்பயனர்கள் ஜோக்கர் தீம்பொருளால் பாதிக்கப்படுகின்றனர். இதில் இருந்து அவர்களைப் பாதுகாத்துக்கொள்ள உடனடியாக அவர்களின் சாதனங்களைச் சோதனை செய்து இந்த 8 ஆப்ஸ்களை அடையாளம் கண்டு டெலீட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மால்வேரால் எடுக்கப்பட்ட சந்தா கட்டணத்தை மீண்டும் மீட்டெடுக்க முடியாது.
இந்த 8 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்
- Auxiliary Message
- Element Scanner
- Fast Magic SMS
- Free CamScanner
- Go Messages
- Super Message
- Super SMS
- Travel Wallpapers
இந்த பட்டியலில் உள்ள 8 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஸ்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ளதா என்று சோதனை செய்து உடனடியாக இவற்றை உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து நீக்கம் செய்து பதுக்கப்பாக இருங்கள். இந்த விஷயம் பற்றி அறியாதவர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக