
இந்திய அரசு நாட்டின் அனைத்து துறைகளையும் நிலையான கட்டமைப்புக்குள் கொண்ட வர வேண்டும் என்ற திட்டத்துடன் டெக் உதவியுடன் டிஜிட்டல் பேமெண்ட், ஈகாமர்ஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இந்தக் கட்டமைப்பிற்குள் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் அரசு அமைப்புகளான எல்ஐசி, ஈபிஎப்ஓ இடம்பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அப்போ எல்ஐசி நிறுவனம், ஈபிஎப்ஓ அமைப்பும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்கிறதா..?!
ஸ்டார்ட்அப் முதலீட்டுத் தளம்
ஈகாமர்ஸ் தளம் எப்படி நாடு முழுவதும் இருக்கும் விற்பனையாளர்களையும், வாடிக்கையாளர்களையும் இணைக்கிறதோ, அதேபோல் இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட்அப் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஓரே தளத்தில் இணைக்க உள்ளது. இதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணப்புழக்கத்தைச் சிறப்பான முறையில் கண்காணிக்க முடியும்.
எல்ஐசி, ஈபிஎப்ஓ முதலீடு செய்யத் திட்டம்
இந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்பு அரசு அமைப்புகளான லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் நிறுவனம், ஈபிஎப்ஓ அமைப்பும் இணைந்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஐசி, ஈபிஎப்ஓ நிறுவனங்கள் இதுநாள் பங்குச்சந்தையில் மட்டுமே முதலீடு செய்து வந்த நிலையில் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்வது பெரும் மாற்றம்.
SIDBI அமைப்பு உருவாக்கும் கட்டமைப்பு
இந்தப் புதிய கட்டமைப்பை SIDBI அமைப்பு உருவாக்க உள்ளது, இவ்வமைப்பு ஏற்கனவே ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான முதலீட்டுப் பணிகளைச் செய்து வரும் நிலையில், வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை வகித்த நேஷனல் ஸ்டார்ட்அப் அட்வைசரி கவுன்சில் கூட்டத்தில் எல்ஐசி மற்றும் ஈபிஎப்ஓ அமைப்புகள் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்திய ஏஞ்சல் முதலீட்டாளர்கள்
இதுகுறித்து DPIIT பிரிவின் கூடுதல் செயலாளர் அனில் அகர்வால் கூறுகையில், இந்தியாவில் வெறும் 6000 ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மட்டுமே உள்ளனர், ஆனால் அமெரிக்காவில் 3 லட்சம் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் உள்ளனர். இதனால் ஸ்டார்ட்அப் நிறுவன முதலீட்டில் இருக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் பிரச்சனைகளைக் களைந்து முதலீடு செய்வோருக்கு எளிதான தளத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளார்.
சாப்ட்பேங்க் மனோஜ் கோலி
இந்த ஐடியா சாப்ட்பேங்க் நிறுவனத்தின் மனோஜ் கோலி கூறியது என்றும் அனில் அகர்வால் தெரிவித்தார். இது கிட்டதட்ட ஒரு மேட்ரிமோனி தளம் போல தான், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஓரே இடத்தில் இணைப்பது மூலம் பிடித்த நிறுவனத்தில் எளிதாக முதலீடு செய்யலாம். மத்திய அரசும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அதிகளவில் ஊக்குவித்து வரும் நிலையில் இப்புதிய கட்டமைப்பு பெரிய அளவில் உதவும்.
இந்தியாவிற்கு நல்ல லாபம்
இப்புதிய கட்டமைப்பு மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எளிதாக முதலீடு செய்வது மட்டும் அல்லாமல் நாட்டில் Ease of doing Business அளவீட்டைப் பெரிய அளவில் மேம்படுத்த முடியும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
பெரும்பாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும் பிரச்சனைகள் இந்திய அரசின் பல்வேறு துறையின் விதிமுறைகள் தான். இந்தக் கட்டமைப்பு மூலம் ஒன் ஸ்டாப் சொல்யூஷன் கிடைப்பது மூலம் முதலீட்டாளர்கள் எளிதாக முதலீடு செய்யலாம்.
இந்திய அரசு போட்ட கட்டுப்பாடுகள்
சமீபத்தில் இந்திய அரசு அண்டை நாடுகளில் இருந்து வரும் முதலீடுகள் அனைத்தையும் தீவரமாகக் கண்காணித்து வருகிறது. குறிப்பாகச் சீனாவில் இருந்து வரும் முதலீடுகளை அதிகளவில் கட்டுப்படுத்தி வருகிறது. இந்தக் கட்டமைப்பு மூலம் நாடுகள் அடிப்படையில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் வரும் முதலீட்டை எளிதாகக் கண்காணித்து மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியும்.
ஈகாமர்ஸ் துறைக்குப் புதிய கட்டமைப்பு
நேற்று வெளியான ஒரு அறிவிப்பில் ஈகாமர்ஸ் நிறுவனங்களின் வர்த்தக்தை புதிய கட்டமைப்புக்குள் கொண்டு வர புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தால் அமெரிக்காவின் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி
இப்படிப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு துறையைக் கட்டுப்படுத்தும் அதேவேளையில் சீரமைத்து வருகிறது. இது வர்த்தகச் சந்தைக்குப் பாதிப்பு எனச் சிலர் கூறினாலும் இதனால் அரசுக்குப் பல வகையில் நன்மை அளிக்கும்.
முறைகேடுகள் தடுப்பு
குறிப்பாக முறைகேடுகள், வரிச் செலுத்துவதில் ஏமாற்று வேலைகளை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். ஈகாமர்ஸ் துறைக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது புதிய கட்டமைப்புத் திட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளக் தொடர்ந்து படியுங்கள்.
அமேசான், பிளிப்கார்ட்
இந்திய ரீடைல் சந்தையில் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் ஆதிக்கத்தைத் தகர்க்கவும், மோனோபோலி பணிகளை வேரோடு பிடுங்கி எடுக்க மத்திய வர்த்தக அமைச்சகம் கொண்டு வந்த திட்டம் தான் ஓபன் நெட்வொர்க் பார் டிஜிட்டல் கட்டமைப்பு. இந்த ஓபன் நெட்வொர்க் பார் டிஜிட்டல் கட்டமைப்பு அனைத்து விதமான வர்த்தகம், சேவை, பணப் பரிமாற்றம் ஆகியவற்றை ஓரே டிஜிட்டல் நெட்வொர்க் கீழ் கொண்டு வரும் ஒரு திட்டம்.
யூபிஐ திட்டம் போல்
மத்திய அரசு டிஜிட்டல் பேமெண்ட் சேவைக்கு எப்படி யூபிஐ சேவையோ, அதேபோலத் தான் ஈகாமர்ஸ் துறைக்கு இந்த ONDC நெட்வொர்க் என அறிவித்துள்ளது. இந்தக் கட்டமைப்பை உருவாக்கவும், ஆலோசனை கூறவும் 9 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளர்கள்
தற்போது ஒவ்வொரு ஈகாமர்ஸ் நிறுவனமும் தத்தம் கட்டமைப்பில் இயங்கி வரும் நிலையில், ஓபன் நெட்வொர்க் பார் டிஜிட்டல் கட்டமைப்பு அறிமுகம் செய்யப்பட்ட பின்பு விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளர்கள் என அனைவரும் இந்தக் கட்டமைப்பு மூலம் தான் அனைத்துவிதமான வர்த்தகத்தையும் செய்ய முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக