
அமைவிடம் :
தமிழ் கடவுளான முருகப்பெருமான், பிரம்மச்சாரியாக இருந்து அருளும் தலமாகக் கேரள மாநிலம், கிடங்கூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது கேரளாவின் புகழ்பெற்ற சுப்பிரமணியர் கோயில்களில் ஒன்றாகும். இது குறைந்தது 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
மாவட்டம் :
கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், ஆயர்குன்னம், கோட்டயம் மாவட்டம் - கேரள மாநிலம்.
எப்படி செல்வது?
கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து மன்னார்காடு வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆயர்குன்னம் என்னும் இடத்திற்குச் சென்று, அங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் இக்கோவிலை அடையலாம். இக்கோவிலுக்கு கோட்டயம், பாலா ஆகிய இரு ஊர்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
கோயில் சிறப்பு :
இந்த ஆலயத்தில் இருக்கும் முருகப்பெருமான், பிரம்மச்சாரியாக நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இவர் 'சுப்பிரமணியசுவாமி", 'கிடங்கூரப்பன்" என்னும் பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள சன்னதிக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை. முருகன் பிரம்மச்சாரியாக இருந்தபோது தான் சூரசம்ஹாரம் செய்தார். அந்த பிரம்மச்சாரி வடிவத்தைத் தரிசிக்க கந்த சஷ்டியை ஒட்டி இங்கு சென்று வரலாம்.
முருகன் சன்னிதிக்கு எதிரே மேற்குப் பகுதியில் மயில் உருவத்துடன் கூடிய உயரமான கொடிமரம் மற்றும் பலிபீடம் அமைந்திருக்கிறது.
கேரளக் கோவில்களில், இங்குள்ள கொடிமரமே மிகுந்த உயரமானது. கோவில் வளாகத்தினுள் மகாவிஷ்ணு, சாஸ்தா சன்னிதிகளும் அமைந்துள்ளன.
இந்தக் கோவிலில் மருத்துவக் குணங்கள் அதிகமுடைய 'குறுந்தொட்டி" எனப்படும் மரத்தைக் கொண்டு கூத்தம்பலம் என்ற மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் ராமாயணக் காட்சிகளும், பரத முனிவரின் நாட்டிய சாஸ்திர வடிவங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
கோயில் திருவிழா :
மாசி மாத கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றி, உத்திரத்தில் ஆறாட்டு நடக்கும் வகையில் பிரம்மோற்சவம், தைப்பூசம், திருக்கார்த்திகை போன்றவை கொண்டாடப்படுகிறது.
வேண்டுதல் :
வழக்குகளில் வெற்றி பெறவும், தொழில் போட்டிகளைச் சமாளிக்கவும், எதிரிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் விரும்புபவர்கள் இங்குள்ள புவனேஷ்வரி அம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வேண்டிக்கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன் :
உடல்நலம் வேண்டுபவர்கள் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், திருமணத்தடை நீங்க வேண்டுபவர்கள் சுயம்வர அர்ச்சனை செய்தும் வழிபடுகின்றனர்.
பக்தர்கள் முருகனுக்கு துலாபாரம், காவடி, சுட்டுவிளக்கு ஏற்றியும் மற்றும் விஷ்ணுக்கு பால்பாயாசம், அப்பம் படைத்து வணங்கி வருகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக