டாடா 407 டெம்போ புதிய அவதாரம் எடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 407 (Tata 407) மிகவும் பிரபலமான வர்த்தக வாகனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இது இலகுரக வர்த்தக வாகனம் ஆகும். டாடா 407 வர்த்தக வாகனத்தின் உற்பத்தி கடந்த 1986ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 35 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போதும் டாடா 407 வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.
இந்த சூழலில் 407 டெம்போவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டீசல் மாடலுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய சிஎன்ஜி வேரியண்ட் 35 சதவீதம் வரை கூடுதல் லாபம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது டீசல் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது.
எனவே டீசல் கார்களை பயன்படுத்துபவர்களும், வர்த்தக வாகனங்களை பயன்படுத்துபவர்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர்களுக்கு டாடா 407 டெம்போவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் டீசல் விலையுடன் ஒப்பிடும்போது, சிஎன்ஜி எரிபொருளின் விலை மிகவும் குறைவு.
எனவேதான் டீசல் மாடலுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி வேரியண்ட் அதிக லாபம் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிஎன்ஜி எரிபொருள் சுற்றுச்சூழலுக்கும் நட்பானது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும். பெட்ரோல், டீசல் வாகனங்கள் அளவிற்கு சிஎன்ஜி எரிபொருள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது.
டாடா 407 சிஎன்ஜி வேரியண்ட்டின் விலை 12.07 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த வேரியண்ட்டில், 3.8 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 85 பிஎஸ் பவரையும், 285 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் இந்த வேரியண்ட்டில் 180 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.
எனவே நல்ல டிரைவிங் ரேஞ்ச் (ஒரு முறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் பயணிக்கும் தூரம்) எதிர்பார்க்கலாம். டாடா 407 டெம்போவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட்டில், யூஎஸ்பி மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் பிளாபங்க்ட் மியூசிக் சிஸ்டம் ஆகிய வசதிகளும் இடம்பெற்றுள்ளன. 407 டெம்போவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட்டை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட 407 டெம்போக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட 407 டெம்போக்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சந்தையில் விற்பனை செய்து அசத்தியுள்ளது.
தற்போது புதிய சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், வரும் காலங்களில் டாடா 407 டெம்போவின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வேகமாக புதுமைக்கு மாறி வருகிறது. எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் செலுத்தி வரும் கவனம் இதற்கு ஒரு உதாரணம்.
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் தற்போது முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த நிறுவனத்தின் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது. இதை தொடர்ந்து சமீபத்தில் புதிய டிகோர் எலெக்ட்ரிக் காரையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது.
இந்த வரிசையில் 407 டெம்போவின் புதிய சிஎன்ஜி வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த புதுமைக்கு வேகமாக மாறி கொண்டுள்ளது.
வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அத்துடன் வாகனங்களின் பாதுகாப்பையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறது. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களுக்கு சமீப காலமாக வரவேற்பு வெகுவாக அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக