ஒரே ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டு, எலக்ட்ரிக் லாரி ஒன்று சுமார் 1,099கிமீ தூரத்திற்கு இயக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு இப்போதுதான் சிறிது சிறிதாக வளர்ந்து வருகிறது. ஆனால் அமெரிக்கா, சீனா போன்ற நம்மை விட பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்ட நாடுகளில் ஏற்கனவே ஏகப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமாகிவிட்டன, தொடர்ச்சியாக அறிமுகமாகி வருகின்றன.
நம் நாட்டில் எதிர்கால பசுமை போக்குவரத்திற்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களே தற்போதைக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன. என்றாலும், நெக்ஸான் இவி, டிகோர் இவி போன்ற சில எலக்ட்ரிக் கார்களும் விற்பனையில் உள்ளன. அதேநேரம் சொகுசு கார் பிராண்ட்களில் இருந்தும் லக்சரி எலக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகி வருகின்றன.
இந்த வகையில் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பது மட்டுமின்றி, மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் வால்வோ போன்ற நிறுவனங்கள் எலக்ட்ரிக் லாரிகள் தயாரிப்பிலும் ஏற்கனவே இறங்கிவிட்டன. இதன்படி ஐரோப்பாவின் ஃப்யூட்டரிசும் (Europe's Futuricum) என்ற கமர்ஷியல் வாகன தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய எலக்ட்ரிக் லாரியை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.
ஐரோப்பாவின் ஃப்யூட்டரிசும் எலக்ட்ரிக் லாரிகளை டிபிடி ஸ்விட்சர்லாந்து மற்றும் காண்டினெண்டல் டயர்கள் என்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்த்து வடிவமைத்து, தயாரித்து வருகிறது. இந்த வகையில் இந்த கூட்டணியில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் லாரி ஒன்று கூடுதலாக எந்தவொரு ரீசார்ஜ்-உம் செய்யப்படாமல், நீண்ட தொலைவு இயக்கப்பட்டு புதிய உலக கின்னஸ் சாதனையை புரிந்துள்ளது.
கிட்டத்தட்ட கடந்த 6 மாத காலமாக டெலிவிரி பணிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த எலக்ட்ரிக் லாரி நேரடியாக இந்த சாதனை பயணத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது அடிப்படையில் ஒரு வால்வோ லாரி ஆகும். அதனை எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரிகளுடன் மேற்கூறப்பட்ட நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன.
இந்த கின்னஸ் சாதனை பயணத்தில் வாகனம் ரீசார்ஜ் செய்வதற்காக இடையில் எந்தவொரு இடத்திலும் நிறுத்தப்படவில்லை என தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த கின்னஸ் சாதனை ஜெர்மனியில் உள்ள 2.8 கிமீ நீளம் கொண்ட ஓவல் சோதனை பந்தய களத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 1,099கிமீ தூரத்திற்கான 392 லேப்களை 23 மணிநேரத்தில் இரு ஓட்டுனர்கள் நிறைவு செய்துள்ளனர். இந்த சோதனை ஓட்டத்தில் சராசரியாக மணிக்கு 50கிமீ வேகத்தில் லாரி இயக்கப்பட்டுள்ளது. அன்றாட பயன்பாட்டிற்கு இந்த வேகமே சரியானது என இந்த எலக்ட்ரிக் லாரியை வடிவமைத்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்களது நிறுவனம் எலக்ட்ரிக் இயக்கத்தில் மிகவும் ஆரம்பக்கட்ட காலத்திலேயே முதலீடு செய்துள்ளதாக கூறும் டிபிடி ஸ்விட்சர்லாந்து நிறுவனத்தின் இயக்குனர் மார்க் ஃப்ராங்க் இந்த உலக கின்னஸ் சாதனை குறித்து பேசுகையில், இந்த இ-லாரி ஒவ்வொரு நாளும் சுமார் 300 கிலோமீட்டர்களை எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் கடக்க கூடியது.
எங்களது செயல்திறனை இப்போது அதிகாரப்பூர்வ ஆவணப்படுத்த முடிந்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றார். நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, ஃப்யூட்டரிசம் பிராண்டில் இந்த எலக்ட்ரிக் லாரியில் சுமார் 680 கிலோவாட்.நேரம் திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது.
இதுதான் ஐரோப்பாவிலேயே லாரியில் பொருத்தப்படும் மிக பெரிய ஆன்-போர்டு பேட்டரி ஆகும். இதன் உதவியுடன் அதிகப்பட்சமாக 680 எச்பி வரையிலான ஆற்றலை இந்த எலக்ட்ரிக் லாரியில் பெற முடியும். மேலும், இந்த எலக்ட்ரிக் லாரியின் மொத்த எடை 19 டன்கள் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக