சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒரு புதிய AI ஆப்ஸ், ஒரு சாதாரண நபரின் புகைப்படத்தை வைத்து அவர்களை ஆபாசப்பட நட்சத்திரமாக மாற்றும் ஃபேக்கிங் தொழில்நுட்பத்துடன் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆண் அல்லது பெண் என்று இருபாலரின் புகைப்படங்களையும் இந்த AI ஆப்ஸ், இணையத்தில் இருக்கும் ஆபாச வீடியோக்களுடன் அவர்களின் முகத்தைப் பொருத்தி, அவர்களை ஆபாச நடிகர்களாகச் சித்தரிக்கிறது.
நெட்டிசன்ஸ்களை திகிலூட்டிய AI ஆப்ஸின் விளம்பரம்
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நேரும் சிக்கல்கள் மற்றும் ஆபத்துகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். சமீபத்தில் வெளியான தகவலின் படி, இணையத்தில் ஒரு விளம்பரம் அனைவரையும் திகிலூட்டியது. காரணம், வெறும் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் நீங்கள் விரும்பும் நபரை ஆபாச நட்சத்திரங்களாக வீடியோக்களில் பதிவேற்ற முடியும் என்ற அழைப்புடன் ஒரு டீப்ஃபேக் வலைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆபாச நடிகர்களின் அசல் முகத்திற்குப் பதிலாகப் பயனரின் முகமா?
இது சில மாதங்களுக்கு முன்னாள் வைரல் ஆகிய பேஸ்ஆப் போன்று செயல்படுகிறது. ஆனால், இது ஆபாச வீடியோவில் உள்ள ஆபாச நடிகர்களின் அசல் முகத்திற்குப் பதிலாகப் பயனரின் முகத்தைப் பதிவேற்றம் செய்கிறது. இது ஒரு வேடிக்கை நிகழ்வாகச் சித்தரிக்கப்பட்டாலும் உண்மையில் இது மிகுந்த ஆபத்தானது. அவர்-அவர் சொந்த படங்களை இப்படி ஆபாச நடிகர்களாக மாற்றம் செய்து பார்ப்பது வேண்டுமானால் ஒரு வழியில் வேடிக்கை என்று வேறு வழியின்றி முட்டாள்தனமாக ஏற்றுக்கொள்ளலாம்.
நெறிமுறை கோட்டைக் கடந்து சென்ற டீப் ஃபேக் வலைத்தளம்
ஆனால், இது பெரும்பாலும் எல்லா நேரங்களிலும் அப்படிச் செயல்படுவது இல்லை என்பதே இங்கு பிரச்சனையாக இருக்கிறது. விஷம எண்ணத்தில் இருக்கும் சில காமுகர்களின் பாலியல் கற்பனைகளை ஆராய இது தவறாக ஒரு புறம் உதவுகிறது. அதே நேரத்தில் பழிவாங்கும் எண்ணத்தில் இருக்கும் ஒருவரின் வாழ்க்கையை அழிக்க இது கருவியாக செயல்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் டீப்ஃபேக் ஆபாசத்திற்கான தளமாகவும், வேறு எந்த தளமும் இது வரை செய்யாத ஒரு நெறிமுறை கோட்டைக் கடக்கவும் செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
குறுகிய காலத்தில் பிரபலமடைந்த வேடிக்கை டீப்ஃபேக் இப்போது ஆபாசத்தில் முடிந்ததா?
கடந்த சில வருடங்களாக, டீப்ஃபேக் எவ்வளவு பிரபலமடைந்து வருகிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். குறிப்பாக இணையத்தில் நாம் பார்க்கும் பொழுதுபோக்கு டாம் குரூஸ் வீடியோக்களாக இருந்தாலும் சரி அல்லது உலகெங்கிலும் உள்ள முக்கிய பிரபலங்களின் சாகச வீடியோக்களாக இருந்தாலும் சரி, அதில் பயனர்களின் முகங்களை மாற்றி பயனர்களை ஒரு பிரபலமாகவே இது குஷி அடையச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது இது ஆபாச தளங்களில் முடிவடையும் என்பதை நாம் எதிர்பார்க்கவில்லை.
ஒரு சாதாரண நபரை ஆபாச நட்சத்திரமாக மாற்றும் AI அம்சம்
எம்ஐடி டெக்னாலஜி ரிவியூ முதலில் அறிவித்தபடி, இந்தத் தளம் ஒரு பயனரின் சொந்த புகைப்படத்தை அதன் சேவையில் சேர்ப்பதை மகிமைப்படுத்துகிறது. இந்த வலைத்தளத்தின் பெயரைப் பாதுகாப்பு காரணத்திற்காக நாங்கள் குறிப்பிட விரும்பவில்லை. இது ஒரு சாதாரண நபரை ஆபாச நட்சத்திரமாக மாற்றுகிறது. கணக்கின் உரிமையாளர் தனது படங்களை மட்டுமே சேர்க்க அனுமதிக்கும் எந்தவொரு பாதுகாப்பு அம்சமும் உண்மையில் இல்லை என்பதே இங்குச் சிக்கலாக மாறியுள்ளது.
ஆபாச வீடியோவில் பயனர் விரும்பும் முகத்தை மாற்றும் ஆப்ஸ்
அவர்கள் வேறு சிலரின் படத்தைச் சேர்த்தால் கூட இந்த வலைத்தளம் செயல்படுவதனால் இது பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த பயன்பாடு வேடிக்கைக்காக வடிவமைக்கப்பட்டது, ஆனால் அந்த வேலையைக் குறைவாகச் செய்கிறது. இந்த வலைத்தளம் வெறும் சில நொடிகளில், மோசமான ஆபாச வீடியோவில் பயனர் விரும்பும் முகத்தை மாற்றி விடுகிறது. முகம் மாற்றப்பட்ட வீடியோவை அந்த நபர் வேறும் முன்னோட்டமாக மட்டுமே பார்க்க முடியும்.
உருவாக்கிய முழு வீடியோவை பதிவிறக்கம் செய்ய இது கட்டாயம்
பயனர் உருவாக்கிய வீடியோவை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், அவர்கள் முழு பதிப்பைப் பெறக் கட்டணம் செலுத்த வேண்டும். உண்மையில் இந்த டீப்ஃபேக் செயல்முறை சரியானது அல்ல, ஆனால் மக்கள் அவர்களின் ஆசைக்கு முன்னாள் நற்பண்பை இழந்துவிடுகிறார்கள். இந்த டீப்ஃபேக் வலைத்தளத்தில் பெண் டீப்ஃபேக்குகளுக்கான பரந்த லைப்ரரி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இடம்பெற்றுள்ளது. இதில் ஆண்களுக்கான ஆபாச லைப்ரரியும் வரையறுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை என்ன? இதனால் என்ன சிக்கல் எழுகிறது?
இது போக, சூப்பர் ஹீரோ வீடியோக்கள், சினிமா பிரபலங்களின் வீடியோகளையும் வலைத்தளம் கொண்டுள்ளது. இது பழிவாங்கும் ஆபாசத்தைப் போன்றது, மற்றும் சில சந்தர்ப்பங்களில் இது இன்னும் மோசமானதாக செயல்படுகிறது. இந்த வலைத்தளம் மூலம் உருவாக்கப்படும் ஆபாச வீடியோக்கள் கொண்ட உள்ளடக்கம் உண்மையானதல்ல என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை விவரிக்க முடியாமல் குழப்பமடைகிறார்கள். இது சாத்தியமற்றது சிக்கலாக மாறுகிறது.
இந்த தளம் முடக்கப்பட்டதா? இந்த தளத்திற்கு இது முடிவாகுமா?
கடுமையான விமர்சனங்கள் மற்றும் நடவடிக்கைக்குப் பின்னர் இப்போதைக்கு, இந்த தளம் இனி புதிய பயனர்களுக்குக் கிடைக்காது என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தளத்திற்கு இது முடிவாகுமா? என்ற கேள்விக்கு உறுதியான பதில் நம்மிடம் இல்லை. அது செயல்பாட்டில் இல்லாவிட்டாலும் கூட, எங்காவது வேறு ஒரு இடத்தில் இதே போன்ற வலைத்தளம் மீண்டும் தோன்றும் என்பதே மறுக்கமுடியாத உண்மையாக இருக்கிறது.
இதை தடுக்க கடுமையான சட்டம் வேண்டுமா?
இத்தகைய தளங்களை உருவாக்குவதைச் சட்டவிரோதமாக்கும் கடுமையான சட்டத்தை சட்டமியற்றுபவர்கள் உருவாக்க வேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளது. அப்போதுதான் நாம் நிம்மதி பெருமூச்சு விட முடியும். இந்த டீப்ஃபேக் வலைத்தளம் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்கிறது என்பது நமக்கு இப்போது தெரிந்துவிட்டது.
பெண்கள் இனி போலியான ஆபாச முயற்சிகளுக்கும் பலியாக வேண்டுமா?
பெண்கள் இனி போலியான ஆபாச முயற்சிகளுக்குப் பலியாகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் எது அசல் முகம் எது போலியாக மார்பிங் செய்யப்பட்ட முகம் என்பதை நாம் சுலபமாகக் கண்டுபிடிக்க முடிகிறது. இருப்பினும், இது போன்ற சிக்கலில் பெண்களை சிக்கி தவிக்கவிடாமல் பார்த்துக்கொள்வதற்கு, ஆண்கள் தான் கடுமையான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக