அமைவிடம் :
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில். இக்கோயில் 500 வருடங்கள் பழமையானதாகும். ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் அருள்பாலிக்கும் கலியுகவரதராஜ பெருமாள் மிகவும் சக்தி வாய்ந்தவராக பார்க்கப்படுகிறார்.
மாவட்டம் :
அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி, அரியலூர் மாவட்டம்.
எப்படி செல்வது?
அரியலூர் நகரிலிருந்து கிழக்கே இரும்புலி கிராமம் செல்லும் சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து சிற்றுந்து, ஆட்டோக்களில் இக்கோயிலுக்கு செல்லலாம்.
கோயில் சிறப்பு :
இத்தலத்தில் பெருமாள் கலியுகவரதராஜர் என்ற திருநாமத்துடன் 12 அடி உயரமுள்ள கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார்.
மூலஸ்தானத்தில் 12 அடி உயரத்திலான கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது. இந்த ஆஞ்சநேயர் ருத்ர அம்சம் கொண்டவராக விளங்குகிறார். இவர் கதை இல்லாமல் வடக்கு முகம் பார்த்த ஒரு கண் ஆஞ்சநேயராக உள்ளார். இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. மாறாக சிலைகள் எதுவும் இல்லை.
இக்கோயிலில் உள்ள தசாவதார மண்டபத்தில் பத்து அவதாரங்களின் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோயிலாக உள்ளது. மூலஸ்தானம் அருகிலேயே தலவிருட்சமான மகாலிங்கமரம் உள்ளது. இது ஆதிகாலத்திலிருந்தது போலவே இன்றும் தளிர்த்து செழித்து காட்சி தருகிறது.இங்கு வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. மாறாக உற்சவர் மூர்த்தி புறப்பாடு உள்ளது.
தாயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது. மூலவரே கம்பத்தில் இருப்பதால் தாயாரும் உடனிருப்பதாக ஐதீகம். உற்சவர் கலியுகவரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.
கோயில் திருவிழா :
சித்திரை தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி, அட்சய திருதியை சுவாமி கருட வாகனத்தில் வீதியுலா, வைகாசி விசாக நட்சத்திர சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் வீதியுலா வருதல்.
ஆடி பதினெட்டு, கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி சனிக்கிழமை உற்சவம், விஜயதசமி, கார்த்திகையில் திருகார்த்திகை, அனுமன் ஜெயந்தி, ஸ்ரீராமநவமியில் ஆஞ்சநேயருக்கும், சுவாமி தாயாருக்கும் சேர்ந்து இரண்டு தேர்கள் இழுக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழாக்கள் நடக்கிறது.
வேண்டுதல் :
விவசாய விளைநிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருந்தால் குறிப்பிட்ட அளவு உணவு பொருட்களை கோயிலுக்கு செலுத்துவதாக வேண்டிக் கொள்கின்றனர். கோயிலை சுற்றிலும் ராட்சத அளவிலான தானிய கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நேர்த்திக்கடன் :
விவசாய விளைநிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருந்தால் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். நோயுற்ற கால்நடைகள் சரியாவதற்கும், முதல் கன்று கோயிலுக்கு காணிக்கையாக செலுத்துவதாகவும் விவசாயிகள் பிரார்த்தனை செய்துவிட்டு, அதன்படி கன்றுகளையும் கோயிலுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக