உத்திரபிரதேச மாநிலத்தின் ஃபிரோசாபாத் மற்றும் மதுராவில் ஒரு மாதத்திற்கும் மேலாக மர்மமான வைரஸ் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் இறந்துள்ளது பதிவாகியுள்ளது. உத்திரபிரதேசத்தில் பதிவாகியுள்ள காய்ச்சல் வழக்குகளில், ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த காய்ச்சல் வழக்குகள் உத்திரபிரதேசத்தின் கான்பூர், பிரயாக்ராஜ் மற்றும் காசியாபாத் ஆகிய மாவட்டங்களிலும் பதிவாகியுள்ளன. இந்த மர்மமான வைரஸ் காய்ச்சல் உத்திரபிரதேசத்தில் மட்டும் தான் உள்ளதா? இல்லை.
டெல்லி, பீகார், ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் உள்ள குழந்தைகளிடையேயும் இந்த மர்மமான வைரஸ் காய்ச்சல் பரவுவதாக தெரிய வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த மாநிலங்களில் இதுவரை இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
ஏன் இப்போது இந்த மர்மமான வைரஸ் காய்ச்சல் பரவுகிறது?
பொதுவாக, ஒரு வருடத்தில் குழந்தைகளுக்கு 6-8 சுவாச தொற்றுகள் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா பெருந்தொற்றின் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் குழந்தைகள் வெளியுலகிற்கு எளிதில் வெளிபடுகின்றனர். இது தொற்றுகள் எளிதில் தொற்ற ஓர் காரணம். இரண்டாவது, மாசடைந்த உணவுகள் மற்றும் அசுத்தமான நீர் போன்றவை பிற தொற்றுநோய்க்கு வழிவகுப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் முதல் இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு, சிக்குன்குனியா முதல் ஸ்க்ரப் டைபஸ் வரை பலவகையான வைரஸ் தொற்றுகள் குழந்தைகளைத் தொற்றிக்கொண்டிருக்கின்றன. டெங்கு, சிங்குன்குனியா மற்றும் மலேரியா போன்ற தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவதற்கு பருவமழையும் ஓர் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன்குனியா
டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்றவை சுத்தமான நீரில் இனப்பெருக்கம் செய்யும் ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகிறது. மலேரியாவானது சுத்தமான மற்றும் சேற்று நீரில் இனப்பெருக்கம் செய்யும் அனோபிலஸ் கொசுக்கள் ஏற்படுகிறது.
இவற்றில் "இன்ஃப்ளூயன்ஸா அல்லது டெங்கு போன்றவை பெரும்பாலானோர் அவதிப்படும் காய்ச்சல் வைரஸ்களாகும். இந்த வகை காய்ச்சல்கள் ஒருவரை மிகவும் பலவீனமாகவும், மந்தமாகவும் உணர வைக்கிறது. மேநும் இந்நோயாளிகளால் உடல் வலியால் பாதிக்கப்படுவார்கள். இந்த காய்ச்சல்களுக்கு அறிகுறி சிகிச்சை மற்றும் நல்ல நீரேற்ற நிலை மட்டுமே தேவை.
அதிகரிக்கும் டெங்கு வழக்கு
வைரஸ் காய்ச்சலைத் தவிர இந்த முறை டெங்கு சற்று அதிகமாக பரவுவதை பார்க்கிறோம். ஒவ்வொரு நாளும் குழந்தைகளிடையே சுமார் 3-5 பாசிட்டிவ் உள்ள டெங்கு நோயாளிகள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இரத்த பரிசோதனை மூலம் டெங்கு அறியப்படும் குழந்தைகள் காய்ச்சல், உடல் வலி, வயிற்று பிரச்சனைகளை அறிகுறிகளாக கொண்டுள்ளனர்.
சில நோயாளிகள் குறைவான இரத்த பிளேட்லெட்டுகளால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றனர். அறிகுறியுள்ள டெங்கு நோயாளிகளுக்கான சிகிச்சையெனில், அது நரம்புகளில் திரவங்களை உட்செலுத்துவது அல்லது இரத்த அழுத்தத்தை இயல்பாக்குவதற்கான மருந்து போன்றவை ஆகும். ஒருவேளை எங்கேனும் இரத்தப்போக்கு ஏற்பட்டால் மற்றும் பிளேட்லெட்டுகள் குறைவாக இருந்தால், அவர்களுக்கு பிளேட்லெட் இரத்தமாற்றம் தேவை என மருத்துவர்கள் மேலும் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு ஏன் இந்த நோய்த்தொற்று இல்லை?
கடந்த வருடம், மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையானது கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் ஊடரங்கு காரணமாக சரிவில் இருந்தது. பொதுவாக இம்மாதிரியான தொற்றுநோய்களின் வழக்குகள் ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே தான் பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு இந்த வழக்கு டிசம்பர் வரை நீடிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஸ்க்ரப் டைபஸ் மிகவும் ஆபத்தானது
மர்மமான வைரஸ் காய்ச்சலான ஸ்க்ரப் டைபஸ் வழக்குகள் மிகவும் ஆபத்தானவை என்று நிபுணர்கள் நம்புகின்றனர். சமீபத்தில் 6-7 வயதுடைய ஒரு குழந்தை 2 வாரங்களுக்கும் மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த குழந்தைக்கு இரத்த பரிசோதனை செய்ததில் ஸ்க்ரப் டைபஸ் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் சிலசமயங்களில், இந்த நோய் ஆபத்தானது. நல்ல வேளை அந்த குழந்தைக்கு கடுமையா நோய் எதுவும் இல்லை மற்றும் வாய்வழி மருந்து மூலமே சரிசெய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சில நேரங்களில் இந்த நோய்த்தொற்று ஒரு பெருந்தொற்றாகும் திறன் கொண்டது. எனவே எப்போது காய்ச்சல் வந்தாலும் அதை உடனே கவனிக்க வேண்டும்.
ஸ்க்ரப் டைபஸ் தொற்றிற்கு நீண்ட காலத்திற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது சிறுநீரக மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தலாம். இது தவிர பரவலான இன்ட்ராவாஸ்குலர் கோகோலேஷன் (டிஐசி) இரத்தப்போக்கு, அதாவது இரத்தத்தின் உறைதல் மற்றும் இரத்தப்போக்கை நிறுத்தும் திறனை பாதிக்கும் ஒரு நிலையை உண்டாக்கலாம். மேலும் இந்நோய் குழந்தைகளில் தோல் வெடிப்புக்களை உண்டாக்கக்கூடியது மற்றும் அவர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கி, இறப்பதற்கான வாய்ப்புக்களையும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முந்தைய ஆண்டு பதிவான டெங்கு வழக்குகள்
முந்தைய ஆண்டுகளால், ஜனவரி 1 முதல் செப்டம்பர் 4 வரை, டெல்லியில் மொத்தம் 124 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2016, 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் நகரத்தில் முறையே 771, 829, 137, 122 மற்றும் 96 வழக்குகள் காணப்பட்டன. இந்த ஆண்டு எவ்வித இறப்புகளும் ஏற்படாத நிலையில், இந்த நோய் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தலா 10 உயிர்களைப் பறித்தது.
கோவிட்-19 க்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் வழக்குகள் அதிகரிக்கும் வேளையில் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும் என்றும், காய்ச்சலுக்கான சரியான காரணம் தெரியாததால் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குழந்தைகளைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?
* முன்னெச்சரிக்கைக்காக கொசுக்கள் வளரும் இடங்களை நன்கு சுத்தமாக கையாள வேண்டும் மற்றும் வீடுகளில் தண்ணீர் தேங்கி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* குழந்தைகள் வெளியே செல்லும் போதெல்லாம் கொசு விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும்.
* முக்கியமாக குழந்தைகளுக்கு பழைய உணவுகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தையை எப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்?
குழந்தைக்கு 3-4 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் இருந்து, அதுவும் ஒரு குழந்தை 103-104 டிகிரி செல்சியஸுக்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் மற்றும் காய்ச்சல் இல்லாமல் குழந்தை எந்த உணவும், திரவங்களையும் உட்கொள்ளாமல் இருந்தால், மூட்டுகளில் கடுமையான வலி அல்லது உடலில் அரிப்புகள் அல்லது சிறுநீர் வெளியேற்றம் குறைவாக இருந்தால், உடனே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக