அமைவிடம் :
திருநாரையூர் சௌந்தரநாத கோவில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்தில் உள்ள திருநாரையூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 33வது தலம் ஆகும். இத்தல இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் ஸ்ரீசுயம்பிரகாசர் எனவும் வழங்கப்படுகிறார்.
மாவட்டம் :
அருள்மிகு சௌந்தர்யேஸ்வரர் திருக்கோவில், திருநாரையூர் அஞ்சல், காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.
எப்படி செல்வது?
சிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், திருநாரையூர் சிவஸ்தலம் அமைந்துள்ளது. சிதம்பரம் - காட்டுமன்னார்குடி (வழி குமராட்சி) சாலையில் செல்லும் பேருந்துகளில் சென்று திருநாரையூர் விலக்கு நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ. நடந்தால் இத்தலத்தை அடையலாம்.
கோவில் சிறப்பு :
இத்தலத்திலுள்ள ஆலயம் சிவாலயமாக இருந்தாலும், இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் 'பொள்ளாப் பிள்ளையார்" என அழைக்கப்படுகிறார். 'பொள்ளா" என்றால் 'உளியால் செதுக்கப்படாத" என்று அர்த்தம். அதாவது, இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர்.
திருமுறைகள் கிடைக்க காரணமாக இருந்ததால் பொள்ளாப் பிள்ளையாருக்கு 'திருமுறை காட்டிய விநாயகர்" என்ற பெயரும் உண்டானது.
முழுமுதற்கடவுளான விநாயகரை முதல் படைவீடான இத்தலத்தில் வணங்குவது சிறப்பான பலன் தரும்.
கோபக்காரரான துர்வாச முனிவரின் சாபத்தால் நாரையாக மாறிய கந்தர்வன் தன் அலகால் கங்கை நீரை கொண்டுவந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து முக்தி பெற்ற தலம்.
இத்தல இறைவன் சந்நிதி, விமானம் அர்த்த சந்திர வடிவில் இரண்டு கலசங்களுடன் காணப்படுகிறது. இத்தகைய அமைப்பிலுள்ள விமானத்தை தரிசிப்பது அபூர்வம்.
சிவன் கோவில்களில் ஒரு சண்டிகேஸ்வரர் இருப்பார். இங்கு ஒரே சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். மூலவர் சௌந்தரேஸ்வரருக்கு ஒருவர், பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கும் திருமூலநாதருக்கு ஒருவர் என இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர் இருக்கின்றனர். பிரகாரத்தில் ஒரே இடத்தில் மூன்று பைரவர்கள் காட்சி அளிக்கின்றனர். இவர்களது தரிசனம் விசேஷமானது.
கோவில் திருவிழா :
சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கிருத்திகை, ஐப்பசி கந்தசஷ்டி விழா, பிரதோஷம், மகா சிவராத்திரி முதலியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் ஸ்ரீநம்பியாண்டர் நம்பி முக்தி அடைந்த நாளான புனர்பூச நட்சத்திரத்தில் 'நம்பி குருபூஜை விழா" சிறந்த திருமுறை விழாவாக கொண்டாடப்படுகின்றது.
பிரார்த்தனை :
நியாயமான வேண்டுகோள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுக்கிறார் இத்தல இறைவன்.
நேர்த்திக்கடன் :
வேண்டுதல்; நிறைவேறியவர்கள் இறைவனுக்கும், அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக