
அமைவிடம் :
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து தெற்கே சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பெருந்தொடர்களில் தென்திசை நோக்கி பரவியுள்ள ஆனைமலைகளில் ஒன்றாகத் திகழ்வது திருமூர்த்தி மலை.
இந்த மலையின் அடிவார கோயிலில் இருந்து தென்மேற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிற்றோடையாகத் தோன்றுகின்ற தோணி நதி என்ற பாலாற்றங்கரையில்தான் அமணலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கின்றார்.
அமணன் என்றால் குற்றமற்றவன் என்பது பொருள். குற்றங்களில் இருந்து நீங்கிய இறைவனே அமணலிங்கம். அமணலிங்கம் என்றால் அழகிய லிங்கம் என்றும் பொருள்படும்.
மாவட்டம் :
அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில், தளி - திருமூர்த்தி மலை, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்.
எப்படி செல்வது?
கோவையிலிருந்தும், திருப்பூரிலிருந்தும், ஈரோட்டிலிருந்தும் இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் உடுமலைப்பேட்டையிலிருந்தும் திருமூர்த்தி மலைக்கு பேருந்து வசதிகள் உண்டு.
கோயில் சிறப்பு :
எல்லாம் வல்ல இறைவன் உறைகின்ற திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம்.
கைலாயத்தில் நடந்த இறைவனின் திருமண கோலத்தை அகத்தியர் கண்டு வணங்கிய இடமே 'பஞ்சலிங்கம்" என வழங்கப்படுகிறது. கைலாயக் காட்சியை இறைவன் இங்கும் காட்டியதால் இத்தலம் தென் கைலாயம் என்றும் சிறப்பு பெறுகிறது.
இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடைவரைக்கோயிலாகும்.
அமணலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள மும்மூர்த்திகளை வழிபடும் பக்தர்கள் சந்தனத்தை வாங்கி கடவுள் உருவச் சிலையின் மீது எறிந்து விசித்திரமாக வழிபடுகின்றனர். அவ்வாறு சந்தனத்தை தூக்கி எறியும்போது மும்மூர்த்திகளின் நெற்றியில் விழுந்தால் நினைத்த காரியம் உடனே நிறைவேறும்.
மலையின் மீது பஞ்சலிங்கம் உள்ளது. அத்திரி முனிவரும், அவரது மனைவி அனுசுயாவும் தினமும் இந்த ஐந்து லிங்கங்களை வழிபட்டு வந்துள்ளார்கள். இன்னமும் அவர்கள் தினமும் இந்த பஞ்சலிங்கத்தை வழிபடுவதாகக் கூறப்படுகிறது.
கோயில் திருவிழா :
மகாசிவராத்திரியன்று நான்கு கால பூஜை. இது தவிர ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.00-2.30 மணி வரை சிறப்பு பூஜை நடைபெறும். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜை இங்கு சிறப்பு பெற்றது. ஆகஸ்ட் மாதத்தில் வருடாபிஷேகம் நடைபெறும்.
வேண்டுதல் :
குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்தில் நீராடி சப்த கன்னிமார்களை வழிபட்டு பின் மும்மூர்த்திகளை வழிபட்டால் குழந்தை நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். இது தவிர முகம் மற்றும் உடலில் மரு உள்ளவர்கள் இங்குள்ள தோணி ஆற்றில் நீராடி பின் அதில் உப்பு, மிளகு வாங்கி போட்டால் மரு நீங்கி விடும்.
நேர்த்திக்கடன் :
குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள விநாயகர் கோயில் முன் உள்ள வரடிகல் என்ற கல்லின் அமர்ந்து அந்த கல்லின் மீது தேங்காய், பழம் வைத்து அந்த கல்லை இரு கைகளால் பிடித்து மனம் ஒன்றி வழிபட வேண்டும்.
அப்படி செய்யும்போது அந்த தேங்காய் பழத்தை அவர்கள் அறியாமல் தொட்டு விட்டால் குழந்தைப்பேறு நிச்சயம் என கூறப்படுகிறது. திருமணம் ஆகாதவர்கள், இளைஞர்களின் சிறந்த படிப்பு, வேலை, மன நிம்மதி வேண்டுபவர்கள் இறைவனுக்கு தேங்காய், பழம் வைத்து வழிபட்டால் சிறந்த பலன் உண்டு என்பது நம்பிக்கை.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக