
கொசோவோவின் பிரிஸ்டினாவைச் சேர்ந்த 33 வயது நபர் ஒருவர முழு மொபைல் போனை விழுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எது? மொபைல் போனை விழுங்கினாரா? எதற்காக முழு மொபைல் போனை விழுங்கினார்? இது என்ன முட்டாள் தனமான செயலாக உள்ளது என்று உங்களுக்குள் சில கேள்விகள் எழுந்திருக்கும். எங்களுக்கும் அதே கேள்விகள் தான் எழுந்தது. மொபைலை விழுங்கிய நபரின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை செய்து தொலைப்பேசியை எடுத்த மருத்துவர் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்.
முழு மொபைலை விழுங்கிய நபர்
மொபைலை விழுங்கிய நபருக்கு அறுவைசிகிச்சை செய்த மருத்துவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த நபர் விழுங்கிய மொபைல் போனின் படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்குப் பிறகு இந்த வினோத சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் ஸ்கேந்தர் தெலகு அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவுக்குத் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வயிற்றில் மிகப் பெரிய அடையாளம் தெரியாத பொருள்
நமக்குத் தெரிந்த தகவல்களின்படி, அடையாளம் தெரியாத நபர் மொபைல் போனை எப்படி விழுங்கினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அறிக்கைகளின் படி, அந்த நபரின் வயிற்றில் மிகப் பெரிய அடையாளம் தெரியாத பொருளை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர் என்பது மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நபரின் வயிற்றை பல்வேறு ஸ்கேன் முறைகள் படி சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது, அது ஒரு மொபைல் போன் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
மருத்துவர்களுக்கே பயம் கொடுத்த 'அந்த' விஷயம் என்ன தெரியுமா?
மொபைலை முழுமையாக விழுங்கிய நபரை இப்போது தான் நாங்கள் பார்க்கிறோம் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். இதில் பயம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், அவரின் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கொண்ட பேட்டரி மொபைல் போனில் இருப்பது தான் பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தை மொபைல் விழுங்கிய நபரிடம் தெரிவித்து, அவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக மருத்துவர் எச்சரித்து அறுவை சிகிச்சைக்கு அனுமதி வாங்கியுள்ளார்.
எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி படங்கள்
அதிர்ஷ்டவசமாக, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்தது மற்றும் செல்போன் அவரது வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது. பேஸ்புக்கில் மருத்துவர் தெலகு பகிர்ந்த படங்களில் எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி படங்கள் ஆகியவை அந்த நபரின் வயிற்றுக்குள் இருக்கும் போனை தெளிவாகக் காட்டுகின்றது. அந்த நபர் வயிற்றுக்குள் இருக்கும் மொபைல் போனை அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுக்க சுமார் இரண்டரை மணி நேரம் எடுத்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
வயிற்றுக்குள் மூன்று பகுதிகளாக கண்டுபிடிப்பு
மேலும் மருத்துவர் கூறுகையில், "ஒரு பொருளை விழுங்கிய ஒரு நோயாளி பற்றி எனக்கு அழைப்பு வந்தது, ஸ்கேன் செய்த பிறகு ஒரு முழுமையான மொபைல் சாதனத்தை மூன்று பகுதிகளாகப் பிரிந்திருப்பதை நாங்கள் கவனித்தோம்" என்று டாக்டர் தெலகு உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளார். " பேட்டரி தான் எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது, ஏனென்றால் அது மனிதனின் வயிற்றில் வெடிக்கக் கூடும்" என்று அவர் கூறியுள்ளார்.
மொபைலை விழுங்கய நபரே தானாக மருத்துவமனை சென்றாரா?
அந்த நபர் வயிற்றில் வலியால் அவதிப்பட்டு தலைநகர் பிரிஸ்டினாவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாக்டர் தெலகு அந்த நபர் ஏன் தொலைப்பேசியை விழுங்கினார் என்பதை வெளிப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். ஒரு சிறிய கேமராவில் பதிவான ஒரு கிளிப் அந்த மனிதனின் வயிற்றில் இருந்த தொலைப்பேசியைக் கண்டுபிடித்து அகற்றுவதைக் காட்டுகிறது.
அந்த நபர் விழுங்கிய மொபைல் மாடல் என்ன?
சாதனத்தை அகற்ற இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆனது என்று மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. தொலைப்பேசியின் உருவாக்கம் தெளிவாக இல்லை. சில அறிக்கைகள் இது நோக்கியா 3310 என்று கூறுகின்றன, மற்றவை இது எல் 8 ஸ்டார் பிஎம் 90 என்று கூறுகின்றன, இது நோக்கியா 3310 போலத் தோற்றமளிக்கும் ஆனால் சிறிய அளவில் உள்ளது என்பதனால் இந்த தொலைப்பேசியை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக