
அமைவிடம் :
சிங்கார வேலனுக்கு, அம்மன் தன் சக்தியை வேலாக வழங்கிய காவிரி தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு நவநீதேஸ்வரர் கோவில் நாகப்பட்டினத்திலுள்ள சிக்கல் என்ற ஊரில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை நவநீதேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். அதனால் அந்த சிவன் தலத்தில் விஷ்ணுவும் வெண்ணெய் பெருமானாக அமர்ந்தார்.
மாவட்டம் :
அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல், நாகப்பட்டினம் மாவட்டம்.
எப்படி செல்வது?
நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சிறிது தொலைவில் இக்கோயில் உள்ளது. இரண்டு ஊர்களிலிருந்தும் ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.
கோயில் சிறப்பு :
இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணி என்ற பெயர் ஏற்பட்டது.
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வேல் வாங்கும் விழாவில் சூரபத்மனை அழிப்பதற்காக தன் தாயிடம் வேல் வாங்கி முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் சிக்கல் சிங்கார வேலருக்கு வியர்க்கும். பட்டுத்துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் இத்தலத்தில் நடைபெறும்.
சூரசம்ஹாரம் - அதற்கான ஆரம்பம் இத்தலமேயாகும். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது ஒரு பழமொழி.
எட்டுக்குடி, எண்கண், சிக்கல் ஆகிய மூன்று தலங்களில் விளங்கும் முருகப்பெருமான் ஒரே அமைப்புடைய மூர்த்திகளாக இருப்பதால் இவைகள் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டது என்பர்.
சிவன், பெருமாள், முருகன், அனுமன் என நால்வரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது கோயில் தனி சிறப்பாகும்.
சைவமும் வைணவமும் இணைந்த ஓர் அற்புத தலம் சிக்கல். மேலும் அம்மனின் 64 சக்தி பீடங்களில் இத்தலமும் ஒன்று.
ஒருமுறை, பஞ்சத்தின் பிடியில் சிக்கிய தேவலோகப் பசு காமதேனு நாயின் ஊனைத் தின்றதால் ஏற்பட்ட சாபம் தீர்த்த தலம் இத்தலம் ஆகும்.
முசுகுந்த சக்கரவர்த்திக்கு ஒரு அந்தணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமும், சாபமும் நீங்கிய தலம் சிக்கல்.
கோயில் திருவிழா :
சித்திரை பிரம்மோற்சவம், ஐப்பசி கந்தசஷ்டி, மாதாந்திர கார்த்திகை வழிபாடு போன்றவை கொண்டாடப்படுகிறது.
வேண்டுதல் :
கஷ்டங்கள் தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
எதிரிகளை அழிக்கும் சத்ரு சம்ஹார திரிசதை பூஜை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன் :
பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தல இறைவன் வெண்ணெய்நாதருக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் உச்சிகால பூஜையின்போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக