ஆசியாவிலும், அமெரிக்காவிலும் மிகவும் பிரபலமாக இருக்கும் 7Eleven நிறுவனம் தனது வர்த்தகத்தை இந்தியாவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என 2019ல் பியூச்சர் குரூப் உடன் கூட்டணி வைத்த நிலையில், ஒரு கடையைக் கூடத் திறக்கப்படாத நிலையில் இருந்து நிறுவனங்கள் மத்தியில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பியூச்சர் குரூப் உடனான ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்ட அடுத்த 2 நாளில் 7Eleven தனது புதிய கூட்டணியே தேர்வு செய்து அசத்தியுள்ளது. இப்புதிய கூட்டணி மிகப்பெரிய புரட்சியை இந்திய ரீடைல் சந்தையில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பியூச்சர் குரூப் உடனான ஒப்பந்தம் ரத்து செய்த 7Eleven வெறும் 2 நாட்களுக்குள் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திடன் கூட்டணி வைத்துள்ளது. இக்கூட்டணி மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம், ஜப்பான் 7Eleven நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்திற்கான மாஸ்டர் பிரான்சைஸ் திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
இந்திய ரீடைல் சந்தையில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு 7Eleven மிகவும் முக்கியமானதாக மட்டும் அல்லாமல் அதிகளவிலான வாடிக்கையாளர்களை அடைய முக்கிய உந்து சக்தியாக இருக்கும்.
3 வருடத்தில் பியூச்சர் குரூப் உடனான கூட்டணியில் 7Eleven ஒரு கடையைக் கூடத் திறக்க முடியாத நிலையில், ரிலையன்ஸ் ரீடைல் உடனான கூட்டணியில் மூலம் அடுத்த 2 நாளில் அதாவது அக்டோபர் 9ஆம் தேதி மும்பை அந்தேரி கிழக்குப் பகுதியில் முதல் 7Eleven கடை திறக்கப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து மும்பையின் முக்கியப் பகுதிகள், வர்த்தகப் பகுதிகளில் அடுத்தடுத்து 7Eleven கடைகளைத் திறக்க உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மும்பை பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
7Eleven கடைகள் என்பது சிறிய வடிவிலான டிபார்ட்மென்டல் ஸ்டோர், இந்தக் கடைகளில் மக்களின் தினசரி பயன்படுத்தும் பொருட்களை விற்பனை செய்யப்படுவது மட்டும் அல்லாமல் 24 மணிநேரமும் இயங்கும் கட்டமைப்பைக் கொண்டு உள்ளது. ஆனால் இந்தியாவில் 24 மணிநேரமும் இயங்க பல மாநிலங்கள் அனுமதிப்பது இல்லை.
ஒருபக்கம் உலகளாவிய வர்த்தகத்தில் முன்னோடியாக இருக்கும் 7Eleven, மறுபுறம் இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் ரிலையன்ஸ் ரீடைல். இந்த மாபெரும் கூட்டணியில் இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கும் 7Eleven மிகப்பெரிய வெற்றியை மாற்றத்தை ரீடைல் சந்தையில் கொண்டு வர முடியும்.
மேலும் ரிலையன்ஸ் ரீடைல் தனது வர்த்தகத்தைக் கொண்டு செல்ல முடியாத அதேவேளையில் சக போட்டி நிறுவனங்கள் இருக்கும் முக்கியமான வர்த்தகப் பகுதியில் 7Eleven கடைகளை வைத்து அதிகளவிலான வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் ரீடைல் ஈர்க்க முடியும்.
அதேபோல் சிறிய நகரங்கள், டவுன் பகுதிகளில் ரிலையன்ஸ் ரீடைல் நேரடியாக இறங்க முடியாத நிலையில் ரிலையன்ஸ் 7Eleven மூலம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யலாம். இந்த 7Eleven கடைகள் மூலம் ரிலையன்ஸ் தனது சொந்த பிராண்டு பொருட்களைப் பெரிய அளவில் வர்த்தப்படுத்த முடியும்.
சொல்லப்போனால் 7Eleven நிறுவனத்தை விடவும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்குத் தான் இக்கூட்டணி மூலம் அதிக லாபம். மேலும் பியூச்சர் குரூப் கடைகளைக் கைப்பற்ற முடியாமல் இருக்கும் முகேஷ் அம்பானிக்கு 7Eleven கூட்டணி வலிமை சேர்க்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக