அமைவிடம் :
உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார். இறையருள் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியது.
எப்படி செல்வது?
தென்காசியிலிருந்து கடையம் செல்லும் வழியில், கடையத்திற்கு சற்றுமுன் மேற்குநோக்கி ஒருவழிப்பாதை வழியாகச் சென்றால் தோரணமலையை அடையலாம்.
கோயில் சிறப்பு :
இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
முருகப்பெருமானின் இடதுபுறத்தில் சற்று உயரமான இடத்தில் இருக்கும் சுனை புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனையில் இருந்து தான் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்துக்கு தண்ணீர் எடுத்துவரப்படும்.
மலை உச்சியில் பெரும் பாறைக்கு இடையில் இப்படி ஊற்று பொங்கி வருவது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். மலை மீது ஏறி இதில் குளிப்பது ஆனந்தமாக இருப்பதோடு அருளும் கிடைப்பதை அந்த நொடியிலேயே உணரலாம்.
அதேபோல் முருகப்பெருமானின் வலதுபுறம் உள்ள பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு பொந்து ஒன்று உள்ளது. அது சாதாரண பொந்து அல்ல அதுவும் ஒரு சுனை தான் அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் இருக்கும். எதிரே ராமர் பாதம் அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னிதியும் உள்ளது.
கோயில் திருவிழா :
அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், கார்த்திகை நட்சத்திரத்தன்றும், பௌர்ணமி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. பிரதோஷம், தைப்பூசம், வைகாசி விசாகம், சித்திரை திருநாளும் முக்கிய திருவிழாக்களாக கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை :
தொழில் வளம் சிறக்க, குடும்ப பிரச்சனை தீர, எதிரிகளின் தொல்லை அகல, திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும், நோய் குணமாகவும், சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர். மருத்துவ படிப்பு, விரும்பிய வேலை, உயர்பதவி கிடைக்கவும் பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன் :
சப்த கன்னியர் வீற்றிருக்கும் மரத்தில் வளையல்களும், தொட்டில்களும் பிரார்த்தனைக்காக கட்டப்படுகின்றன. பொங்கலிடுதல், மொட்டையடித்தல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி காணிக்கை ஆகியவை நேர்த்திக்கடன்களாக செலுத்தப்படுகின்றன.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக