இன்று நாம் பார்க்கவிருக்கும் திருத்தலம் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்.
இந்த கோயில் எங்கு உள்ளது?
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், கீழப்பெரும்பள்ளம், தரங்கம்பாடி தாலுகா, மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலம் ஆகும்.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து சுமார் 22 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. கேது பெயர்ச்சி காலங்களில் போக்குவரத்து வசதி செய்து தரப்படுகிறது. சாதாரண நாட்களில், பேருந்து வசதி அதிகமில்லை. மயிலாடுதுறையில் இருந்து காரில் சென்று வரலாம்.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தலத்தில் மூலவர் நாகநாதர், தாயார் சௌந்தர்யநாயகி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். நவகிரகங்களில் இத்தலம் கேது பகவானுக்கு உரியது.
இத்தல விநாயகர் அனுக்கிரக விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் கேது பகவான் தனி சன்னதியில் மேற்கு நோக்கி இருக்கிறார். பாம்பு தலையுடனும், மனித உடலுடனும் உள்ள இவர், சிம்ம பீடத்தில் இரு கை கூப்பி சிவ சன்னதியை நோக்கி வணங்கிய கோலத்தில் இருக்கிறார்.
வேறென்ன சிறப்பு?
கேது இங்கு பிரதான மூர்த்தி என்பதால் நவகிரக சன்னதி இல்லை. கேது சன்னதிக்கு அருகில் இரண்டு சூரியன் சிலைகளும், சனீஸ்வரர் சிலையும் உள்ளன. உத்தராயண புண்ணிய காலத்தில் (தை-ஆனி) ஒரு சூரியனுக்கும், தட்சிணாயண புண்ணிய காலத்தில் (ஆடி-மார்கழி) மற்றொரு சூரியனுக்கும் விசேஷ பூஜை நடக்கிறது.
ஜாதக ரீதியாக நாகதோஷம் உள்ளவர்கள் முதலில் நாகநாதரையும், பின் கேதுவையும் வழிபட வேண்டும். கேதுவிற்குரிய செவ்வரளி மலர் வைத்து, கொள்ளு சாத நைவேத்தியம் படைத்து, ஏழு தீபம் ஏற்றி வணங்குவது விசேஷம்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
சிவராத்திரி, ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம், பங்குனியில் வாசுகி உற்சவம் போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனை செய்யலாம்?
நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனை மற்றும் பயம் நீங்க, தொழில், வியாபாரம் சிறக்க, தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க, ஆயுள் அதிகரிக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, தலைமுறை சிறக்க நாகநாதரையும், கேது பகவானையும் வழிபடலாம்.
ஜாதகத்தில் கேது தசாபுத்தி நடப்பவர்கள், ஜென்ம நட்சத்திரத்தில் பாலாபிஷேகம் செய்து வழிபடலாம். படிப்பில் முன்னேற, குடும்ப விருத்தி பெற இவரிடம் வேண்டிக் கொள்ளலாம்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
கேது பகவானுக்கு கொள்ளு சாத நைவேத்தியம் படைத்து, பலவர்ண வஸ்திரம் சாற்றி வழிபடுகிறார்கள்
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக