செவ்வாய், 23 நவம்பர், 2021

வெடிக்கும் விவகாரம்: அமேசான்னு சொல்லாதிங்க வாய்ல அடிங்க., "கஞ்சா கம்பெனினு" சொல்லுங்க- சிஏஐடி குற்றச்சாட்டு!

இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்களின் போட்டித் தன்மையும் வளர்ச்சியும் அதீத வகையில் இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன. மக்களிடையே ஆன்லைன் விற்பனை தளங்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் மக்கள் பாதுகாப்பான முறையில் சாதனங்கள் வாங்கவே விரும்புகின்றனர்.

கூடுதலாக இ-காமர்ஸ் நிறுவனங்கள் பண்டிகை கால சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் அமேசான் இணையதளம் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மத்திய பிரதேசம் மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் கஞ்சா விற்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதோடு 20 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இகாமர்ஸ் தளம் மூலம் கஞ்சா விற்பனை

இதையடுத்து முன்னணி இகாமர்ஸ் தளம் மூலம் கஞ்சா விற்பனை செய்ததாக புகார்கள் எழுந்தது. அதுமட்டுமின்றி லாபத்தில் குறிப்பிடத்தக்க பங்கு இகாமர்ஸ் தளத்துக்கு செலுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு ஆதாரங்கள் திரட்டப்பட்டு வந்தது. இதையடுத்து அமேசான் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் "அமேசான் நிறுவனம் எல்லா சட்டங்களுக்கும் உட்பட்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். அதோடு தங்கள் வியாபாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு சட்டப்படி அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.

கஞ்சா விற்பனை செய்த கும்பல்

தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தின் விற்பனையாளராக பதிவு செய்யப்பட்ட நிறுவனம்தான் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அமேசான் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில் அமேசான் தரப்பில் ஒத்துழைப்பு அளிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது.

ஒத்துழைப்பு அளிக்கப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை

இதையடுத்து இதுதொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் அமேசான் நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்து இந்திய தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இனிப்புகள் விற்பனை என்ற பெயரில் கஞ்சா விற்பனை

மேலும் இதுதொடர்பான விசாரணையில் இரண்டு நபர்கள் ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதை அமேசானில் விற்பனையாளராக பதிவு செய்திருப்பது தெரியவந்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்திய பிரதேசம் மாநிலம் பிந்த் மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு அமேசான் மூலமாக கஞ்சா அனுப்பப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஸ்டீவியா என்ற தாவர வகை இனிப்புகளை விற்பனை செய்வது என்ற பெயரில் கஞ்சா சப்ளை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

சட்டவிரோத பொருட்களை விற்பனை செய்வதை அனுமதிக்காது

மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் -காமர்ஸ் தளம் மூலம் இனிப்பு பொருட்களை விற்பனை செய்வது என்ற பெயரில் கஞ்சா விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து அமேசான் தரப்பு நிர்வாக இயக்குனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அமேசான் தனது தளத்தின் மூலம் சட்டவிரோத பொருட்களை விற்பனை செய்வதை அனுமதிக்காது எனவும் இந்த விவகாரத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படுவதாகவும் அமேசான் தரப்பில் முன்னதாக அறிக்கை தெரிவித்தது. 

21.7 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக புகார்

இதுதொடர்பான வழக்கு பதிவில் எந்த ஒரு தனிப்பட்ட அதிகாரியின் பெயரையும் நிறுவனம் குறிப்பிடவில்லை. நவம்பர் 13 ஆம் தேதி குவாலியரில் வசிக்கும் பிஜேந்திர தோமர் மற்றும் கல்லு பாவையா என்ற சூரஜ் ஆகியோரிடம் இருந்து 21.7 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து கோஹாட் காவல் நிலையத்தில் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் பவையாவும் ஜெய்ஸ்வாலும் இணைந்து பாபு டெக்ஸ் என்ற நிறுவனத்தை உருாக்கி அமேசானில் விற்பனையாளராக பதிவு செய்திருப்பது தெரியவந்தது. அவர்கள் இனிப்பு வகைகள் என்ற பெயரில் கஞ்சா சப்ளை செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியாவில் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட பொருட்களை பட்டியலிடுவதையும் விற்பனை செய்வதையும் நிறுவனம் அனுமதிக்காது என அமேசான் தரப்பில் குறிப்பிடப்பட்டது. 

அதிகாரிகளுக்கு தேவையான முழு ஒத்துழைப்பு

அதேபோல் இந்த பிரச்சனை மூலம் எங்களுக்கு அறியப்பட்டது, விற்பனையாளரின் தரப்பில் ஏதேனும் இணக்கமின்மை உள்ளதா என்பதை தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் விசாரணையில் அதிகாரிகளுக்கு தேவையான முழு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவை நாங்கள் வழங்குவதை உறுதியளிக்கிறோம் என அமேசான் செய்தித் தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், அமேசான் தளத்தின் மூலம் கஞ்சா விற்பனை செய்வதாக கூறப்படுவதை தொடர்ந்து அமேசான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அதை அமேசான் என்பதை விட கஞ்சா கம்பெனி என்று அழைக்கப்பட வேண்டும் என டுவிட் செய்துள்ளார். இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் இளைஞர்கள் எதிர்காலத்தை சீரழிக்கும் இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய விதிகள் உருவாக்க வேண்டும் எனவும் சிஏஐடி ராஜஸ்தான் மாநிலத் தலைவர் சுபாஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்