இந்தியாவில் யூஸ்டு கார் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடையவுள்ளது. இதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஒரு காரை குடும்ப உறுப்பினராக சேர்ப்பது என்பது நமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்க கூடிய விஷயமாக இருக்கும். அந்த கார் புதியதோ அல்லது செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் வாங்கியதோ, எது எப்படி இருந்தாலும் நமது மனம் உற்சாகத்தில் துள்ளி குதிக்கும். ஆனால் தற்போதைய சூழலில் ஒரு புதிய காரை வாங்குவதற்கு நாம் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.
அதுவும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாம் பொறுமை காக்க வேண்டிய தேவை தற்போது உள்ளது. இதற்கு உலக அளவில் நிலவி வரும் செமி கண்டக்டர் சிப் (Semi Conductor Chip) பற்றாக்குறைதான் காரணம். இதன் காரணமாக யூஸ்டு கார்களுக்கான தேவை உயர்ந்து கொண்டே வருகிறது. செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை, யூஸ்டு கார் மார்க்கெட்டிற்கு எப்படி பலன் அளிக்கும்? என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.
இந்தியாவை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையால் தடுமாறி வருகின்றன. இதன் காரணமாக கார்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. எனவே கார் உற்பத்தி நிறுவனங்கள் விலையை உயர்த்தி கொண்டே வருகின்றன. மேலும் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையால் கார்களின் உற்பத்தி பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனவே முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு கார்களை விரைவாக டெலிவரி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. உற்பத்தி குறைந்துள்ளதால், கார்களுக்கான காத்திருப்பு காலம் (Waiting Period) உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் எந்தவொரு காருக்கும் சராசரியாக 2 மாதங்கள் காத்திருப்பு காலம் உள்ளது.
அதிலும் டிமாண்ட் அதிகமாக உள்ள ஒரு சில கார்களுக்கு ஒரு வருடம் வரை கூட காத்திருப்பு நிலவி வருகிறது. ஒரு காரை நீங்கள் முன்பதிவு செய்தால் இவ்வளவு அதிக காலம் காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகுதான் கார் உங்களுக்கு டெலிவரி செய்யப்படும். இதுதவிர விலை உயர்வு காரணமாக, கூடுதல் தொகையை நீங்கள் செலவிட வேண்டும்.
இந்தியாவில் சமீப காலமாக கார்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி நடப்பாண்டில் மட்டும் மூன்று முறை கார்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து வாடிக்கையாளர்களை யூஸ்டு கார் மார்க்கெட்டின் பக்கம் திருப்பி வருகின்றன.
யூஸ்டு கார்களை குறைவான விலையில் வாங்க முடியும். அத்துடன் அதிக காலம் காத்திருக்க வேண்டியதில்லை. எனவே தற்போதைய செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னை, யூஸ்டு கார் மார்க்கெட்டிற்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் புதிய கார்களுக்கான முன்பதிவு எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகதான் இருந்து வருகிறது.
ஆனால் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னையால் புதிய கார்களுக்கான காத்திருப்பு காலம் அதிகமாக இருப்பதாகவும், இதனால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை எனவும் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Automobile Dealers Associations - FADA) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வின்கேஷ் குலாட்டி கூறுகையில், ''கடந்த ஆண்டு கார்களுக்கான தேவை மிகப்பெரும் சவாலாக இருந்தது. ஆனால் அதை போல் அல்லாமல் தற்போது செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை காரணமாக சப்ளையில் மிகப்பெரிய பிரச்னை இருந்து வருகிறது.
தற்போதைய நிலையில் 2-3 மாதங்களில் இருந்து குறிப்பிட்ட சில மாடல்கள் மற்றும் வேரியண்ட்களுக்கு 12 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகிறது. எனவே முடிந்த வரை விரைவாக கார்களை முன்பதிவு செய்யுமாறு வாடிக்கையாளர்களை வலியுறுத்தி வருகிறோம். ஏனெனில் குறிப்பிட்ட ஒரு தேதியில் டெலிவரி கிடைக்கும் என அவர்கள் மனதில் நினைத்திருக்கலாம்.
ஆனால் அந்த தேதியில் டெலிவரி கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன'' என்றார். இந்தியாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். அதற்கு பதிலாக சொந்த காரில் பயணம் செய்வதை பாதுகாப்பாக கருதுகின்றனர்.
எனவே தற்போது கார்களுக்கு அதிகமான தேவை உள்ளது. ஆனால் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை காரணமாக புதிய கார் மார்க்கெட் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் நிறைந்த இந்தியாவில் புதிய காருக்கு அதிகமாக செலவிடுவதை விட யூஸ்டு காருக்கு குறைவான தொகையை செலவிட்டால் போதும் என்ற எண்ணம் இருக்கிறது.
இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து யூஸ்டு கார் மார்க்கெட்டிற்கு நன்மையை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் யூஸ்டு கார்களை வாங்கும்போது கவனமாக இருப்பது நல்லது. கூடுமானவரை நன்கு தெரிந்த மெக்கானிக்குளின் உதவியுடன் யூஸ்டு கார்களை வாங்குவது நன்மை பயக்கும். இல்லாவிட்டால் நீங்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக