
இந்த கோயில் எங்கு உள்ளது?
ஆலங்குடி குருபகவான் கோயில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திருவாரூர் - மன்னார்குடி ரோட்டில் சுமார் 30 கி.மீ தொலைவில் ஆலங்குடி உள்ளது. கும்பகோணத்தில் இருந்தும் ஆலங்குடி செல்லலாம்.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள், அந்த வகையில் இந்த கோவிலில் நுழைந்ததும் அம்மன் சன்னதி, பின்னர் சுவாமி சன்னதி, பின்னர் குருவின் சன்னதி அமையப்பெற்றுள்ளது.
இங்குள்ள மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார்.
விஸ்வாமித்திரர், முகுந்தர், வீரபத்திரர் ஆகியோர் வழிபட்ட புண்ணிய தலமாகும்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 161வது தேவாரத்தலம் ஆகும்.
இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மை தழும்புகள் இருப்பதை காணலாம்.
பார்வதி தேவியின் தந்தையான தட்சன், சாபம் நீங்கி ஆட்டுத் தலையுடன் காட்சி அளிக்கின்றார். இவர் உற்சவர் சிலைகள் இருக்கும் இடத்தில் காட்சி அளிக்கின்றார்.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயர்ச்சி விழாவும், இந்த விழாவை முன்னிட்டு குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழாவும் நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 27ஆம் தேதி நவம்பர் 13ஆம் தேதியான இன்று குரு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற உள்ளன.
வேறென்ன சிறப்பு?
இந்த ஆலயம் ஊரின் நடுவே அழகாக, ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கின்றது.
கருமை நிற பூக்கள் கொண்ட பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளது இந்த ஆலயம். விஷத்தின் தன்மையால் இந்த கருமை இருக்கலாம் என கூறப்படுகிறது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
குருபெயர்ச்சி ஆராதனை, சித்ரா பௌர்ணமி விழா, தைப்பூசம் பங்குனி உத்திரம் தட்சிணாமூர்த்திக்கு தேர்விழா நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுரு வாரமாக கொண்டாடப்படுகின்றது.
இந்த கோவிலில் உள்ள குருபகவானுக்கு மாசி மாதம் வரும் வியாழக்கிழமைகளில் மட்டும் தான் அபிஷேகமும் மற்றும் பல விசேஷ அபிஷேக அலங்கார ஆராதனையும் நடைபெறுகிறது.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனை செய்யப்படுகிறது?
நாக தோஷம் நீங்க, மனக் குழப்பம், பயம் நீங்குவதற்கு இங்குள்ள விநாயகரையும், திருமணத்தடை, கல்வியில் சிறக்க இந்த ஆலயத்தில் பிரார்த்தித்து வழிபடலாம்.
குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக