உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் உள்ள பிருந்தாவனம் பகுதியில், தடையை மீறி வீடியோ படம் பிடித்த யூடியூபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த யூடியூபர் வேறு யாரும் அல்ல, ஏற்கனவே ஒருமுறை நாயை பலூனில் கட்டி பறக்க விட்டு வீடியோ போட்டு சர்ச்சையைக் கிளப்பி கைதானவர்தான்.
மதுரா அருகே உள்ளது நிதிவன் ராஜ் என்ற வனப் பகுதி. இங்குதான் ராதையுடன் தனது நேரத்தை கிருஷ்ணர் செலவிடுவார் என்ற ஐதீகம் பக்தர்களிடையே உண்டு. இந்தப் பகுதி மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கெளரவ் சர்மா என்ற யூடியூபர் தனது சானலுக்காக இந்த காட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அந்த வனப்பகுதியை படம் பிடித்து அதை தனது கெளரவ்ஸோன் யூடியூப் சானலில் போட்டார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது சட்டவிரோதம், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து அவர் மீது உபி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். டெல்லியில் தங்கியுள்ள கெளரவ் சர்மா உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருடன் வீடியோ எடுக்க உதவிய சகோதரர் பிரசாந்த், நண்பர்கள் மோஹித், அபிஷேக் ஆகியோரையும் போலீஸார் தேடி வருகின்றனர். நவம்பர் 6ம் தேதி இவர்கள் நிதிவன் பகுதிக்குள் போய் வீடியோ படம் பிடித்துள்ளனர் என்று போலீஸார் கூறியுள்ளனர்.
கடந்த மே மாதம்தான் ஒரு நாயை பலூனில் கட்டி பறக்க விட்டு அதை வீடியோ எடுத்து தனது யூடியூப் சானலில் போட்டிருந்தார் கெளரவ் சர்மா. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். அதன் பிறகு அந்த வீடியோவை டெலிட் செய்து மன்னிப்பும் கேட்டிருந்தார் கெளரவ் சர்மா. இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையைக் கூட்டியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக