Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 27 நவம்பர், 2021

இந்திய தயாரிப்பிற்கு தடைவிதித்துள்ள எகிப்து அரசு!! ஆட்டோ-ரிக்‌ஷாக்கள் இனி இயங்கக்கூடாதாம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூன்று-சக்கர வாகனங்களுக்கு எகிப்து அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பயணிகள் பாதுகாப்பு விஷயத்திலும், சாலை ஒழுங்கு குறித்தும் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கங்களும் புதிய புதிய திட்டங்களை அறிவிப்பது வழக்கம். நம் இந்திய அரசாங்கமும் நம்மை ஆச்சிரியப்படுத்தக்கூடிய பல அறிவிப்புகளை இதற்கு முன்னர் வெளியிட்டு இருந்தது.

இந்த வகையில் எகிப்து அரசாங்கம் அறிவித்துள்ள அதிரடி நடவடிக்கை தான், மூன்று சக்கர ஆட்டோ ரிக்‌ஷாக்களுக்கு தடையாகும். பயணிகளின் பாதுகாப்பு கருதி எகிப்து நாட்டு அரசு ஆட்டோ ரிக்‌ஷாக்களுக்கு மாற்றாக மினி வேன்களை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்த அறிக்கை ஒன்றை எகிப்தியன் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் நெவின் கேமா வெளியிட்டுள்ளார்.

அதில், டுக்-டுக் எனப்படும் மூன்று சக்கர ஆட்டோ ரிக்‌ஷா வாகனத்திற்கான அடிப்படை பாகங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அவரது அறிக்கையில், போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதையும், குடிமக்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பான வாகனங்களை வழங்குவதையும் நோக்கமாக கொண்ட அரசின் திட்டத்தை செயல்படுத்தும் கட்டமைப்பிற்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்டோ ரிக்‌ஷாக்களை மினி வேனாக மாற்றி கொள்ளுங்கள் என்று மட்டுமில்லாமல் இந்த போக்குவரத்து தூய்மையான ஆற்றலினால் இயங்கக்கூடியதாக பார்த்து கொள்ளுங்கள் எனவும் எகிப்து அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிக்கைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே, அதாவது 2019ஆம் ஆண்டில் இருந்தே இத்தகைய மூன்று சக்கர வாகனங்களுக்கு ஓட்டுனர் உரிமம் நிறுத்தப்பட்டுவிட்டது.

முன்பு இந்த டுக்-டுக் வாகனங்கள் முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. அதன்பின் 2014இல் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கையால் டுக்-டுக் வாகனங்கள் முழுவதுமாக இறக்குமதி செய்யப்படுவதில் இருந்து மாற்றி கொள்ளப்பட்டு, பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு வந்தன.

இந்த நடவடிக்கையின் மூலமாக டுக்-டுக் வாகனங்களை அசெம்பிள் செய்வதற்கு எகிப்தில் ஆங்காங்கே தொழிற்சாலைகள் உருவாகின. 2005இல் இருந்து எகிப்தில் டுக்-டுக் எனப்படும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன என்றால் நம்ப முடிகிறதா. எகிப்தில் டுக்-டுக் வாகனங்களை நம்பி சுமார் 30 லட்ச பேர் இருக்கின்றனர் என கடந்த ஆகஸ்ட்டில் அமைச்சர் கேமா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

எகிப்திய தொலைக்காட்சி சேனல் ஒன்றில் 'ஆன் மை ரெஸ்பான்ஸிபிளிட்டி' என்கிற நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து மேலும் பேசிய அவர், டுக்-டுக் வாகன போக்குவரத்தை தடுப்பது என்பது சற்று கடினமாக பணியாகும். எகிப்தில் பெருநகரங்களில் இருந்து கிராமப்புறங்கள் வரையில் டுக்-டுக் வாகனங்கள் பரவியுள்ளன. டுக்-டுக் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் பெரும்பாலாக இந்தியாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன.

2014இல் இருந்து 2016 வரையிலான வெறும் 2 வருட காலக்கட்டத்தில் டுக்-டுக் வாகனங்களை இயக்குவதற்காக சுமார் 99,000 பேருக்கு ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவாறு தான் உள்ளதாகவும் பொது அணிதிரட்டல் மற்றும் புள்ளி விபரங்களுக்கான மத்திய நிறுவனம் ஒன்று கடந்த 2018இல் தெரிவித்திருந்தது.

டுக்-டுக் ரிக்‌ஷாக்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நீக்க வேண்டுமென்றால், எகிப்தில் சுமார் 3 மில்லியன் ரிக்‌ஷாக்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் டுக்-டுக் ஆட்டோ ரிக்‌ஷாக்களை முக்கிய சாலைகளில் ஓட்டுவதற்கு தடையும், பிற சாலைகளில் இயங்குவதற்கு மட்டும் அனுமதியும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து விதமான டுக்-டுக் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டுக்-டுக் ஆட்டோ ரிக்‌ஷாக்களுக்கு மாற்றாக அவற்றை வைத்திருப்பவர்களுக்கு மினிவேன்களை வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக இந்த நாட்டில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓட்டுனரின் வருமானத்தை பொறுத்து இந்த மாற்று செலவு வழங்கப்பட்டு வருகிறதாம். ஆனால் உண்மையில் ஆட்டோ ரிக்‌ஷாகளை காட்டிலும் மினி வேன்களை பயன்படுத்துவது தான் ஒரு வகையில் சிறந்தது. மூன்று சக்கர ஆட்டோ ரிக்‌ஷாக்களில் அதிகப்பட்சமாக 5 பேர் வரையில் செல்வது தான் சிறந்தது. அதற்குமேல் ஏற்றுவது பெரும் விபத்தை நாமே தேடி செல்வதற்கு சமமாகும்.

ஆனால் மினி வேன்களில் அதிகப்பட்சமாக 8 பயணிகள் வரையில் பயணிக்கலாம் என கடந்த ஏப்ரல் மாதத்தில் எகிப்து மேம்பாட்டு துறை அமைச்சர் கலீத் காசிம் தெரிவித்திருந்தார். விபத்துகளில் அதிகளவில் சிக்குவது மட்டுமின்றி டுக்-டுக் வாகனங்கள் சட்ட விரோத சம்பவங்களுக்கும் பரவலாக பயன்படுத்தப்படுவதாக எகிப்து நாட்டின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக