இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இனி தனது கிரெடிட் கார்டுகளுக்குப் பிராசசிங் கட்டணம் மற்றும் ஈஎம்ஐ செலுத்துவதில் வரியை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போதும் கூடுதல் கட்டணம் மற்றும் வரியும் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
எஸ்பிஐ கார்ட்ஸ் மற்றும் பேமெண்ட் சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் பிராசசிங் கட்டணம் மற்றும் அதற்கான வரி விதிக்கப்படும். மேலும் இந்தப் புதிய கட்டணம் மற்றும் வரி டிசம்பர் 1, 2021 முதல் முறைக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது, அதாவது அடுத்த 17 நாட்களில்.
99 ரூபாய் பிராசசிங் கட்டணம்
நவம்பர் 12ஆம் தேதி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வின் கிளை நிறுவனமான எஸ்பிஐ கார்ட்ஸ் மற்றும் பேமெண்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மெர்சன்ட் ஈஎம்ஐ பரிமாற்றங்களுக்கு 99 ரூபாய் பிராசசிங் கட்டணமும் அதற்கான வரியும் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
அதாவது எஸ்பிஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் கடைகள், ஈகாமர்ஸ் தளங்கள், மொபைல் ஷாப்பிங் செயலிகள் மூலம் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கும் கடனை ஈஎம்ஐ-ஆக மாற்றும் சேவை அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஈஎம்ஐ-க்கும்
அப்படிக் கடனை ஈஎம்ஐ-ஆக மாற்றிய பின்பு செலுத்தப்படும் ஒவ்வொரு ஈஎம்ஐ-க்கும் இனி கூடுதலாக 99 ரூபாய் பிராசசிங் கட்டணமும் அதற்கான வரியும் விதிக்கப்பட உள்ளது. இப்புதிய கட்டணம் மூலம் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் அதிகத் தொகையைச் செலவிட வேண்டி வரும்.
வட்டி மட்டும்
மேலும் சில விற்பனையாளர்கள் அல்லது கடைகள் கிரெடிட் கார்டு ஈஎம்ஐ தொகையில் வட்டியை மட்டும் செலுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கும், அப்படி வட்டி செலுத்துவதற்கும் பிராசசிங் கட்டணம் உள்ளது. மேலும் இந்தப் புதிய கட்டணம் ஈஎம்ஐ-ஆக மாற்றிய பின்பு செலுத்தப்படும் ஈஎம்ஐ-க்கு மட்டுமே விதிக்கப்படுகிறது.
டிசம்பர் 1 முதல்
இப்புதிய கட்டணம் டிசம்பர் 1ஆம் தேதி முதலே அறிமுகம் செய்யப்படுவதால், அதற்கு முன் செய்யப்படும் ஈஎம்ஐ பேமெண்டுகளுக்கு எவ்விதமான கட்டணமும் இல்லை. மேலும் கேன்செல் அல்லது ரத்துச் செய்யப்பட்ட ஈஎம்ஐ பரிமாற்றங்களுக்கும் எவ்விதமான கட்டணமும் வரியும் இல்லை.
எஸ்பிஐ வங்கி
இதுபோன்ற கட்டணத்தைப் பிற வங்கிகள் ஏற்கனவே நடைமுறையில் வைத்திருக்கும் நிலையில் எஸ்பிஐ கார்ட்ஸ் மற்றும் பேமெண்ட் சர்வீசஸ் நிறுவனம் தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இப்புதிய கட்டணம் ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ செலுத்தும் போதும் கூடுதல் கட்டணமாகச் சேர்க்கப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக