Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 டிசம்பர், 2021

கைலாச குகை... பாறையாக காட்சியளிக்கும் மரம்...!! அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோவில் தேனி

தினம் ஒரு திருத்தலம்... கைலாச குகை... பாறையாக காட்சியளிக்கும் மரம்...!! -  Seithipunal
சுருளிவேலப்பர் கோவில் தேனி மாவட்டத்திலுள்ள சுருளிமலையில் அமைந்துள்ளது. இதனை நெடுவேள்குன்றம் என்றும் அழைக்கின்றனர்.

மூலவர் : சுருளிவேலப்பர்
உற்சவர் : வேலப்பர்
தீர்த்தம் : சுரபிதீர்த்தம்
புராணப்பெயர் : சுருதிமலை
பழமை : 1000 ஆண்டுகளுக்கு முன்
ஊர் : சுருளிமலை
மாவட்டம் : தேனி

தல வரலாறு :

மகாவிஷ்ணுவின் மகளான வள்ளியை, மலையரசனான நம்பிராஜன் வளர்த்து வந்தார். வள்ளியை முருகப்பெருமான் மணந்து கொண்டார். திருமண சீராக நம்பிராஜன், தனது ஆட்சிக்குட்பட்ட மலைப்பிரதேசங்களை கொடுத்தார். அதில் இந்த மலையும் ஒன்று.

இம்மலையில் முருகப்பெருமான் குடிகொண்டுள்ளார். ஒருசமயம் சனிபகவான், தன் சஞ்சாரப்படி தேவர்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. தேவர்கள், தங்களைக் காத்தருளும்படி இங்குள்ள முருகனை தஞ்சமடைந்தனர். 

சுவாமி அவர்களுக்கு அடைக்கலம் தந்து காத்தருளினார். இத்தலத்தில் இனிய சுருதியுடன் அருவி கொட்டுவதால், சுருதி எனப்பட்ட தீர்த்தம், சுருளி என மருவியது. முருகனுக்கும் சுருளிவேலப்பர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆண்டிக்கோலத்தில் இருப்பதால் இவர், சுருளியாண்டி என்றும் அழைக்கப்படுகிறார்.

ராவணேஸ்வரன் தனது தவத்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் ஆளும்படி வரம் பெற்று தேவர்களை கொடுமைப்படுத்தினான்.

அவனுக்கு முடிவு கட்ட எண்ணிய தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆகியோர் இங்குள்ள கைலாசநாதர் குகையில் மகாவிஷ்ணு தலைமையில் ஆலோசனை செய்தனர். அவர்களை அழிக்க ராவணேஸ்வரன் தனது அரக்கர் படையுடன் இங்கு வந்தான். 

தேவர்களை காக்க மகாவிஷ்ணு பூதசொரூபத்துடன் பஞ்சபூதங்களாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக நின்றார். அவரது கோலத்தை கண்டு பயந்த ராவணேஸ்வரன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான்.

இவ்வாறு தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் தவம் புரிந்த கைலாசகுகையின் மேல் பகுதியில் சுருளிவேலப்பர் அருள்புரிகிறார்.

தலப்பெருமை :

சிவனின் திருமணத்தின்போது, அனைவரும் இமயமலைக்குச் சென்றுவிட வடக்கு உயர்ந்து, தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகம் சமநிலையை இழக்க சிவன், தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார்.

பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார். இதனால்தான் இக்குகை கைலாசகுகை எனப்படுகிறது. 

தல சிறப்பு :

இத்தலத்தில் முருகன் குகைக்கோவிலில் அருள்பாலிக்கிறார். விபூதிக்குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறையின் மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது. 

பிரார்த்தனை : 

சுவாமிக்கு விசேஷ அபிஷேகங்கள், பால்குடம் எடுத்து முடிக்காணிக்கை செலுத்தி, சுரபி நதியில் நீராடி வணங்க பாவம் நீங்கும், நல்வாழ்வு, வேண்டும் வரம் கிடைக்கும், தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன் :

பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னதானம் செய்து, இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக