
மூலவர் : ஆதிகேசவப்பெருமாள்.
தல விருட்சம் : இலந்தை மரம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்பு.
ஊர் : பவானி.
மாவட்டம் : ஈரோடு.
தல வரலாறு :
ஒரு சமயத்தில், அசுரகுருவான சுக்கிரனின் பொறாமைக்கு ஆளான குபேரன், அவனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி பூலோகத்தில் தலயாத்திரை சென்றான்.
அவன் இவ்வழியாக சென்றபோது புலி, மான், யானை, சிங்கம், பசு, நாகம், எலி என ஒன்றுக்கொன்று எதிரான குணங்களை உடைய விலங்கினங்கள் ஒரே இடத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அதைக்கண்ட குபேரன் அருகில் வந்தபோது தேவர்கள், மகரிஷிகள், கந்தர்வர்கள் என பலர் தவம் செய்து கொண்டிருந்தனர். மிருகங்களும் அவர்களுக்கு தொந்தரவு தராமல் அமைதியாக இருந்தன.
ஆச்சர்யமடைந்த குபேரன், கொடிய மிருகங்கள் அமைதியாக இருக்கும் இத்தலம் புனிதம் வாய்ந்ததாகத்தான் இருக்க வேண்டுமென எண்ணினான். இவ்விடத்தில் திருமால், சிவனை தரிசிக்க விரும்பி தவம் செய்தான். இருவரும் அவனுக்கு காட்சி தந்தனர்.
குபேரன் அவர்களிடம், புனிதமான இந்த இடத்தில் தனக்கு அருளியது போலவே எப்பொழுதும் அருள வேண்டும் என வேண்டினான். அவனுக்காக சிவன் சுயம்புவாக எழுந்தருளினார். திருமாலும் அருகிலேயே தங்கினார். ஆகையால் இத்தலத்திற்கு அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில் எனப் பெயர் ஏற்பட்டது.
தல பெருமை :
ஆதிகேசவர் சன்னதிக்கு முன்புறம் வேணுகோபாலர் ராதா, ருக்குமணியுடன் தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். இவருக்கு பின்புறத்தில் பசு ஒன்று உள்ளது. இந்த பசுவின் முன்பகுதியில் தலை இருப்பதோடு, பின் உடல் பகுதியில் மற்றொரு தலையும் இருக்கிறது. இவ்வாறு இரண்டு தலைகளுடன் பசு காட்சியளிப்பது சிறப்பம்சமாகும்.
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :
திருமண, புத்திர தோஷம் இருப்பவர்கள் இத்தல இறைவனை நைவேத்தியம் படைத்து, திருமஞ்சனங்கள் செய்து வழிபடுகின்றனர். புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் பெருமாளுக்கு பாசிப்பருப்பு நைவேத்தியம் படைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் துலாபாரம் செலுத்தி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
திருவிழா :
இத்தலத்தில் சித்திரையில் பிரம்மோற்சவம், ஆடிப்பெருக்கு மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
செல்லும் வழி :
ஈரோடு மாவட்டத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் பவானி இருக்கிறது. பேருந்து நிறுத்தில் இருந்து சிறிது தூரம் சென்றால் அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் சுவாமி திருக்கோவிலை அடையலாம்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக