
இந்த கோயில் எங்கு உள்ளது?
அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூரில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் திருக்கோயிலூர் அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சியிலிருந்து திருக்கோயிலுக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
ஆலயத்தின் நாயகனாக விளங்கும் திரிவிக்ரம சுவாமிகளின் பிரமாண்டத் திருக்கோலம் நம் கண்ணுக்கும், கருத்துக்கும் வியப்பூட்டுகிறது. இவரே உலகளந்த பெருமாள் என அழைக்கப்படுகின்றார்.
வலது காலை உயரத் தூக்கி, இடது திருவடியில் நின்று புன்னகையுடன் சேவை சாதிக்கின்றார்.
இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது.
சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
வேறென்ன சிறப்பு?
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 54வது திவ்ய தேசம். பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருகார்வானம் எனப்படும்.
பொதுவாக அனைத்து பெருமாள் கோயிலிலும் விஷ்ணு வலது கரத்தில் சக்கரம், இடது கரத்தில் சங்கு இருப்பது வழக்கம். ஆனால் உலகளந்த பெருமாளின் கரங்களில் வலது கையில் சங்கு, இடது கையில் சக்கரம் ஏந்தி ஞானத்தை அருள்கின்றார்.
அரசன் ஒருவனின் ஆணவத்தை அடக்க குள்ளமாக வந்து பின் விசுவரூபமெடுத்து ஓரடியால் வானத்தை அளந்தும், மற்றொரு அடியால் பாதாள உலகை அளந்தும், மூன்றாவது அடியை எங்கே வைப்பது என மகாபலியை கேட்கும் விதமாக வலது கையை வைத்துள்ளார்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
தமிழ் புத்தாண்டு, ராமநவமி, ராமானுஜர் விழா, வைகாசி வசந்த உற்சவம், ஆனியில் திருமாலுக்கு ஜேஷ்டாபிஷேகம், வாமன ஜெயந்தி மூன்று நாட்கள், புரட்டாசி பவித்ர உற்சவம், கைசிக ஏகாதசி.
ஆடியில் பத்து நாட்கள் ஆண்டாள் மற்றும் பெருமாளுக்கும் புஷ்பங்கி சேவை. ஆவணியில் வேணுகோபாலருக்கு 10 நாட்கள் விழா, ஐப்பசி திருவோணத்தன்று முதலாழ்வார்களுக்கு 5 நாட்கள் விழா, மணவாள மாமுனிகள் பத்து நாள் உற்சவம், கார்த்திகை தீப உற்சவம் மூன்று நாள் போன்றவை கொண்டாடப்படுகிறது.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனை செய்யப்படுகிறது?
நல்ல பதவி அடைய விரும்புபவர்களும், பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச்சிறப்பு.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பெருமாளுக்கு வஸ்திரம் மற்றும் துளசி மாலை சாற்றுகின்றனர்.
நெய்விளக்கு ஏற்றலாம், தாயாருக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், துர்க்கை அம்மனுக்கு குங்கும அபிஷேகம், பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக