
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் தஞ்சாவூரில் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு பேசிய அவர், மத்திய அரசு நெல் கொள்முதலை நிறுத்தப்போவதாக வெளியாகும் செய்திகள் அச்சம் ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்தார். இதனை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறிய பி.ஆர்.பாண்டியன், தற்போது தொடங்க உள்ள முன்பட்டா சம்பா அறுவடையை அரசு கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற்றாலும், கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை தொடர்ந்து மறைமுகமாக மேற்கொண்டு வருவதாக பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டினார். இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உணவுக் கிடங்குகள் நீண்டகால ஒப்பந்தத்துக்கு வாடகைக்கு விடப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் வேதனை அளிப்பதாகவும், மன்னார்குடியில் உள்ள கிடங்கு தற்போது ரிலையன்ஸ் வசம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்துல மத்திய அரசிடம் தமிழக அரசு விளக்கம் கேட்க வேண்டும் என வலியுறுத்திய பி.ஆர்.பாண்டியன், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த சலுகைகளை திமுக அரசு பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக விவசாயிகளிடையே அச்சம் இருப்பதாக குறிப்பிட்டார்.
கடந்த ஆட்சியில் இடுபொருள் இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு மத்திய அரசு 20 ஆயிரம் வழங்கி வந்த நிலையில், அதனை திமுக அரசு ரூ.6,030 ஆக குறைத்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். மேலும், பருத்தி கொள்முதலுக்கு தமிழக அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்து வந்ததை தமிழக அரசு நிறுத்திவிட்டதாக வெளிவரும் செய்திகளுக்கும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக