இந்த கோயில் எங்கு உள்ளது?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலமாட வீதியில் அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் பின்புறமுள்ள மேலமாட வீதியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
பெருமாளின் இடது மடியில் அமர்ந்த மகாலட்சுமி பெருமாளின் தோளில் கைபோட்டபடி இருப்பதைக் காண முடியும். அவளது கையில் தாமரை மலர் உள்ளது. இவள் பெருமாளை நோக்கி தனது பார்வையைத் திருப்பியிருக்கிறாள்.
இங்கு வந்து கோரிக்கை வைக்கும் பக்தர்களின் குறையை உடனே தீர்க்கும்படி அவள் பெருமாளிடம் தெரிவித்துக் கொண்டே இருக்கும் வகையில், அவர் மீது வைத்த கண்ணைத் திருப்பாமல் இருப்பதாக ஐதீகம். இப்படி ஒரு சிலையமைப்பு காண்பதற்கு அரிய ஒன்றாகும்.
வேறென்ன சிறப்பு?
இந்தப் பெருமாள் நரசிம்மர் என அழைக்கப்பட்டாலும், அவருக்கு சிங்கமுகம் கிடையாது. இப்படிப்பட்ட பெருமாளை 'பிரகலாத வரதன்" என அழைப்பது வழக்கம்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் சுவாதி நட்சத்திர நாளிலும், பிரதோஷத்திலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
கடன் பிரச்சனை, நீதிமன்ற வழக்கு பிரச்சனை, வீடு மற்றும் நிலம் சார்ந்த பிரச்சனைகள் தீர்வதற்கும், வியாபாரம் பெருகுவதற்கும் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
எந்தக் குறை ஏற்பட்டாலும், அதை இவர் நிவர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதால் நரசிம்ம பெருமாளிடமும், தாயாரிடமும் பக்தர்கள் கண்ணீர் வடித்து உருக்கமாக தங்கள் கோரிக்கைகளைச் சொல்வதை இங்கு காண முடியும்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்கும், மகாலட்சுமி தாயாருக்கும் நீராஞ்சன தீபம் செலுத்தும் வகையில் பக்தர்கள் அரிசி, தேங்காய், நல்லெண்ணெய் எடுத்து செல்கின்றனர்.
சர்க்கரையும், எலுமிச்சை சாறும் கலந்த பானகத்தை நைவேத்தியம் செய்கின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக