இந்தியாவில் டோல்கேட்கள் மூலம் கிடைக்கும் வருவாய் உயரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். இந்தியாவில் தற்போதைய நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு (National Highways Authority of India - NHAI) சுங்க சாவடிகள் மூலம் ஒரு ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த வருவாய் அடுத்த மூன்று ஆண்டுகளில் 1.40 லட்சம் கோடி ரூபாயாக உயரவுள்ளது.
இது ஒரு ஆண்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் வருவாய் ஆகும். ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து அடர்த்தி ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருவதால், இந்தியாவின் உள்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், ''நமது (இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின்) தற்போதைய சுங்க சாவடி வருவாய் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இது 1.40 லட்சம் கோடி ரூபாயாக உயரவுள்ளது'' என்றார். இந்தியாவின் உள்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்களையும் அவர் அழைத்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தின் அளவு உயர்ந்து கொண்டே வருவதால், இயற்கையாகவே உள்கட்டமைப்பு திட்டங்களின் மூலமாக கிடைக்க கூடிய வருவாய் விகிதம் உயர்ந்து கொண்டே இருப்பதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது தேசிய நெடுஞ்சாலை பணிகள் வேகம் எடுத்து வருகின்றன.
அமெரிக்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்துவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவான போக்குவரத்திற்கு தரமான சாலைகள் அவசியம். அப்படிப்பட்ட சாலைகள் மூலமாக நாட்டின் பொருளாதாரம் மேம்படும். எனவேதான் தேசிய நெடுஞ்சாலை பணிகளில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதுதவிர விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சாலைகளை அமைப்பதிலும் ஒன்றிய அரசு முழு முயற்சியுடன் செயல்பட்டு கொண்டுள்ளது. சாலை விபத்துக்களுக்கு வாகன ஓட்டிகளின் அலட்சியம் மற்றும் விதிமுறை மீறல்கள் மட்டுமின்றி, சாலைகளும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றன.
மோசமான சாலைகள் காரணமாகவும் இந்தியாவில் நிறைய விபத்துக்கள் நடைபெறுகின்றன. எனவே குண்டும், குழியுமான சாலைகளால் நடைபெறும் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை உயர்த்தியதை இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம். அத்துடன் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக வாகனங்களில் பாதுகாப்பு வசதிகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
அதாவது ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகளை வாகன நிறுவனங்கள் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசு படிப்படியாக கட்டாயமாக்கி வருகிறது. இதன் காரணமாக வாகனங்களின் விலை உயர்கிறது என்றாலும் கூட, வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கிறது.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகளின் பலனை வரும் காலங்களில் இந்தியா அனுபவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஒரு ஆண்டுக்கு 1.50 லட்சமாக உள்ளது. இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் பெரும் அளவில் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி, தேசிய நெடுஞ்சாலை பணிகள், வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல், சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைத்தல் ஆகியவற்றுடன் மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளையும் ஆர்வமுடன் மேற்கொண்டு வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. அத்துடன் சிஎன்ஜி வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டுள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் காற்று மாசுபாடு ஆகிய பிரச்னைகளை குறைப்பதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக