
வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு எச்சரிக்கைகளை தெரிவிக்கும் விதமான புதிய வழிக்காட்டல் செயலி ஒன்றை இந்திய சாலை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் (MoRTH), ஐஐடி மெட்ராஸ் மற்றும் டிஜிட்டல் தொழிற்நுட்ப நிறுவனமான மேப் மை இந்தியா (Map my India) உடன் இணைந்து வாகன ஓட்டிகள் மற்றும் சாலை பாதுகாப்பு தொழிற்நுட்பங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த மூன்று தரப்பினரும் கூட்டாக குடிமக்களுக்காக ஒரு இலவச வழிக்காட்டல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த நேவிகேஷன் செயலியானது, வரவிருக்கும் விபத்து அபாய பகுதிகள், வேகத்தடைகள், கூர்மையான வளைவுகள் மற்றும் பள்ளங்கள் போன்ற பிற ஆபத்துகளை பற்றிய எச்சரிக்கைகளை குரல் மற்றும் காட்சிகளாக வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும்.
சாலை விபத்துகள் அதிகம் நடைபெறக்கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை குறைக்கும் முயற்சியாக, சாலை விபத்துகளினால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை முற்றிலும் தவிர்ப்பதற்கான மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக இந்த மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேப் மை இந்தியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள, ‘மூவ்' (MOVE) என அழைக்கப்படும் இந்த வழிசெலுத்தல் சேவை செயலியானது, 2020ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் ஆத்மநிர்பார் ஆஃப் கண்டுப்பிடிப்பு சவாலில் வெற்றி பெற்றுள்ளது. விபத்துகள், பாதுகாப்பற்ற பகுதிகள், சாலை & போக்குவரத்து நெரிசல்கள் நிறைந்த பகுதிகளை வரைப்படத்தில் தெரிவிக்கவும், ஒளிப்பரப்பவும் அதிகாரிகள் மட்டுமின்றி குடிமக்களும் இந்த செயலியை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் பெறப்படும் தரவுகள் ஐஐடி மெட்ராஸ் மற்றும் மேப் மை இந்தியா நிறுவனத்தால் பகுப்பாய்வு செய்யப்படுமாம். எதிர்காலத்தில் சாலை நிலைமைகளை மேம்படுத்த அரசாங்கத்திற்கு இந்த செயலி மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம், உலக வங்கியின் நிதியுதவி உடன் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட, தரவுகள் மூலம் செயல்படக்கூடிய சாலை பாதுகாப்பு மாதிரியை சாலை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.
சாலைகளை பாதுகாப்பானதாக்க மற்றும் அவசரகால பதிலை மேம்படுத்த உதவுவதற்காக ஐஐடி மெட்ராஸ் உருவாக்கிய ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தள (iRAD) மாதிரியை இந்தியாவின் 32க்கும் மேற்பட்ட மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பயன்படுத்தவுள்ளன. இதற்காக ஐஐடி குழுவினர் வெவ்வேறான மாநில அரசாங்கங்கள் உடன் கையெழுத்திட்டுள்ளனர்.
இதன் வாயிலாக, அந்தெந்த மாநிலங்களின் சாலை வரைப்படங்கள் இந்த புதிய செயலியில் கிடைக்க பெறும். மத்திய அரசாங்கம் வருகிற 2030ஆம் ஆண்டிற்குள் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை 50% ஆகவும், சாலை விபத்துகளினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாகவும் குறைக்க முனைப்புடன் பணியாற்றி வருகிறது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே தற்போது இந்த செயலி வெளியிடப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பின் அவசியத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும் நிலையில், சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் விளைவாக கடந்த ஆண்டுகளை காட்டிலும் கடந்த 2020இல் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கவனித்தக்க அளவில் குறைந்துள்ளது.
கடந்த 2020இல் குண்டும், குழியுமான சாலைகள் காரணமாக 3,564 விபத்துகள் நடைபெற்றுள்ளதாக கூறும் ஒன்றிய அரசாங்கம், இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய 2019ஆம் ஆண்டில் 4,775ஆக இருந்ததாக தெரிவிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த 2020ஆம் ஆண்டில் குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைகளை மோசமாக பராமரித்ததன் விளைவாக எத்தனை சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன? என பாராளுமன்றத்தில் எதிர்கட்சிக்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைதுறை அமைச்சரான நிதின் கட்கரி இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க வேண்டுமென்றால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழிசெலுத்தல் செயலியை வரும் நாட்களில் நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக