
இந்தியாவில் யுபிஐ பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சமீபத்தில் UPI ஆப்ஸ்களை இந்தியர்கள் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். முக்கிய நகரங்கள் முதல் துவங்கி, உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூகிள் பே, போன்பே போன்ற UPI ஆப்ஸ்கள் பாதுகாப்பானவை தான் என்றாலும் கூட, அதைப் பயன்படுத்தும் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான பாதுகாப்பு டிப்ஸ்களை பற்றி அறிந்துகொள்வது சிறப்பானது.
மக்கள் எப்படிப் பாதுகாப்பாக UPI ஆப்ஸ்களை பயன்படுத்தலாம், பாதுகாப்பான பரிவர்த்தனைக்கு நீங்கள் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பது போன்ற மிக முக்கியமான தகவலைத் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். GPay, Paytm, PhonePe போன்ற UPI கட்டணப் பயன்பாடுகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? அப்போது, இந்த பதிவைக் கட்டாயம் இறுதி வரை படியுங்கள். இந்த UPI கருவிகள் நமது பரிவர்த்தனை முறைக்கு வசதியைக் கொண்டுவரும் அளவுக்கு, அவற்றில் சில நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன என்பதே உண்மை.
UPI ஆப்ஸ் மூலம் என்ன தீமைகள் ஏற்படக் கூடும்?இந்த UPI ஆப்ஸ் மூலம் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி நாம் கவனம் செலுத்தாவிட்டால் பரவாயில்லை, ஆனால், இதன் மூலம் நடக்கக் கூடிய தீமைகள் பற்றி அனைவரும் கவனம்கொள்வது உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு பாதுகாப்பளிக்கும் என்பதை மறக்க வேண்டாம். இதை நாம் அனைவரும் தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்த UPI ஆப்ஸ் மூலம் என்ன தீமைகள் ஏற்படக் கூடும் என்று நீங்கள் கேட்கும் பட்சத்தில், இணைய வழி மோசடி, ஹேக்கிங் போன்ற நாச வேலைகளால் மக்களின் பணம் அவ்வப்போது பறிபோவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும்.
இதுபோன்ற பயன்பாடுகள் இருக்கும்போது, இணைய மோசடிகளுக்கு இரையாகாமல் இருக்கப் பயனர்கள் UPI பேமெண்ட் பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் சில குறிப்பிட்ட தந்திரங்களை அறிந்திருந்தால் அவர்களின் பணம் பாதுகாக்கப்படும். இதில் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்களும் உள்ளது. உதாரணத்திற்குச் சீரற்ற இணைப்புகளைக் கிளிக் செய்யாமல் இருப்பது, மோசடி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது, PIN எண், கடவுச்சொல் போன்ற அத்தியாவசிய பரிவர்த்தனை விவரங்களை வழங்குவது போன்ற சில எளிய வழிமுறைகள் அடங்கும்.
UPI பரிவர்த்தனை மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய குறிப்புகள் மற்றும் டிப்ஸ்களை இங்கே வழங்கியுள்ளோம். இவற்றைச் சரியாகப் பின்பற்றி உங்கள் டிஜிட்டல் பரிவத்தனைக்கான பாதுகாப்பைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள். சரி, இப்போது உங்களின் UPI ஆப்ஸ் பாதுகாப்பைப் பலப்படுத்த முதலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
உங்கள் PIN நம்பரை யாருடனும் பகிரக் கூடாதா? ஏன்?பட்டியலில் முதலில் வரும் பாதுகாப்பு டிப்ஸ், உங்கள் UPI ஆப்ஸ் சேவைக்கான பாதுகாப்பு PIN ஐடியை ஒருபோதும் யாரிடமும் பகிர வேண்டாம். குறிப்பாக அது உங்கள் நண்பராக இருந்தாலும், குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி, அல்லது உங்கள் வலக்கையில் நீங்கள் மிகவும் நம்பும் ஒருவராக இருந்தாலும் சரி, யாருடனும் பின் எண்களை மட்டும் ஒருபோதும் பகிர்ந்து விடாதீர்கள். இது உங்களை மோசடிகளுக்கு ஆளாக்கும். ஒருவேளை இதற்கு முன் உங்கள் பின் எண்ணை நீங்கள் வெளிப்படுத்தியிருந்தால், அதை உடனடியாக மாற்றம் செய்யுங்கள்.
எப்போதும் வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்துவது அவசியமா?உங்கள் UPI ஆப்ஸ் மற்றும் பரிவர்த்தனை பாஸ்வோர்டுகளை எப்போதும் வலுவான கடவுச்சொல்லுடன் அமைக்க முயலுங்கள். இது உங்கள் ஃபோனையும், உங்கள் கட்டணப் பயன்பாடுகளையும் பாதுகாக்கப் பெரிதும் உதவும். பொதுவாகப் பெரும்பாலானோர் உங்கள் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற எளிய பாஸ்வோர்டுகளைப் பயன்படுத்துகிறீர்கள். இதைக் கட்டாயம் நீங்கள் தவிர்க்க வேண்டும். உங்கள் கடவுச்சொல்லை வலிமையானதாக மாற்ற, எழுத்துக்கள், எண்கள் மற்றும் எழுத்துகளின் கலவையை உருவாக்குவது எப்போதும் சிறப்பானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
சரிபார்க்கப்படாத கணக்குகள் அல்லது தெரியாத தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சலில் இருந்து உங்கள் போனிற்கு வரும் இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள். தெரியாத எண்களில் இருந்து வரும் பெரும்பாலான இணைப்புகள் போலியான செய்திகளை வழங்குகிறது. இது உங்களை மோசடி வலையில் சிக்கவைக்க அதிக வாய்ப்புள்ளது. இவற்றை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். குறிப்பாக உங்களை இந்த இணைப்பை கிளிக் செய்ய வைப்பதற்காக நீங்கள் தவிர்க்க முடியாத சில சலுகைகள் மற்றும் பரிசுகளைத் தருவதாகக் கோரி, உங்கள் ஆசையைக் கிளப்பி, மோசடி வலையில் சிக்க வைப்பார்கள் என்பதை மறக்கவேண்டாம்.
சைபர் மோசடிக்குப் பலியாகதீர்கள்இவற்றை அனுப்புவதன் மூலம், மோசடி செய்பவர் தனிநபர்களை லாபகரமான சலுகைகள் மூலம் கவர்ந்திழுத்து, பின், OTP போன்றவற்றை உங்களிடம் கேட்டு, உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைச் சூறையாடிவிடுவார்கள். அல்லது உங்கள் வங்கி அதிகாரி போல் அல்லது வேறு நிறுவனத்தில் இருந்து அழைப்பது போல் நடித்து, உங்கள் விவரங்களைக் கேட்டு உங்களை மோசடி செய்வார்கள். இதுபோன்ற இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலமோ அல்லது அத்தகைய அழைப்புகளுக்குப் பதிலளிப்பதன் மூலமோ பல நபர்கள் இதுவரை மோசக்காரர்களால் சைபர் மோசடிக்குப் பலியாகியுள்ளனர்.
உங்கள் பரிவர்த்தனை பயன்முறையை எளிமையாக வைத்திருங்கள்UPI கட்டணப் பயன்பாடுகளில் ஒன்றை மட்டும் பயன்படுத்த முயலவும். அதுவும் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட கட்டணப் பயன்பாட்டைப் பயன்படுத்துவதும் பாதுகாப்பை அதிகரிக்கும். பல பயன்பாடுகளைப் பயன்படுத்துவது மோசடிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலும் ஒரு ஸ்மார்ட்போனில் இரண்டு பயன்பாடுகளை மட்டும் வைத்துக்கொள்வது சிறப்பானது.
ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு புதுப்பிப்பு தேவைப்படுகிறது மற்றும் ஒவ்வொரு புதுப்பிப்பும் சிறந்த அம்சங்களையும் நன்மைகளையும் உங்களுக்குத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. UPI பேமெண்ட் ஆப்ஸை எப்போதும் தொடர்ந்து அப்டேட் செய்துகொண்டே இருங்கள். இது உங்கள் பாதுகாப்பையும், UPI ஆப்ஸின் பயனர் அனுபவத்தையும் மேம்படுத்திக்கொண்டே இருக்கும் என்பதை மறக்கவேண்டாம்.
இதுவரை உங்கள் UPI ஆப்ஸை அப்டேட் செய்யாவிட்டால், இப்போது உடனே உங்களின் ஆப்ஸிற்கான சமீபத்திய பதிப்பிற்கு உங்களை அப்டேட் செய்துகொண்டு பாதுகாப்பாக இருங்கள். இந்த எளிய டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும். நீங்கள் பாதுகாப்பாக இருப்பது மட்டுமின்றி, உங்களை சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்பையும் பலப்படுத்த அவர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தி அறிவுரை கூறுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக