ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது இந்தியா மட்டுமின்றி பெரும்பாலான உலக நாடுகள் அனைத்திலும் குற்றமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சாலையில் இயங்கும் ஒவ்வொரு வாகனத்தின் ஓட்டுனரின் அடையாளமும் அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஓட்டுனர் உரிமம் தகுந்த பயிற்சிகளை பெற்றவர்கள் மட்டுமே வாகனங்களை பொது சாலைகளில் இயக்க அனுமதிக்கிறது. இதனால் சாலை விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன. இருப்பினும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டி போலீஸாரிடம் மாட்டி கொள்பவர்களை அவ்வப்போது பயணத்தின்போது பார்த்திருப்பீர்கள்.
இந்த நிலை நம் இந்தியாவில் மட்டுமில்லை. ஐரோப்பாவில் கூட உள்ளது. இந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த புல்வெல் போலீஸார் சுமார் 83 வயதான முதியவரை சமீபத்தில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்துள்ளனர். அவரை தொடர்ந்து விசாரித்ததில் பல திடுக்கும் விஷயங்கள் போலீஸாருக்கு தெரிய வந்துள்ளன.
அதாவது, இவர் தனது 12 வயதில் இருந்து கிட்டத்தட்ட 70 வருடங்களாக ஓட்டுனர் உரிமம் இல்லாமலேயே பல்வேறு வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். முறையான ஓட்டுனர் உரிமம் எதுவும் இல்லாவிடினும், இதற்கு முன்பு ஒருமுறை கூட போலீஸாரிடம் சிக்கியது கிடையாதாம். இதனை தொடர்ந்து மேலும் விசாரணைக்காக இந்த முதியவர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
தொடர் விசாரணையில், தான் எந்தவொரு சாலை விபத்திற்கும் இதுவரையில் காரணமாக இருந்ததில்லை என கூறும் அவர், தான் எப்போதும் ட்ரைவிங்கின் போது மிகவும் கவனமாக இருந்ததாகவும் தெரிவிக்கிறார். 70 வருடங்களாக ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஒருவர் வாகனங்களை ஓட்டி வந்துள்ளார் என்பது ஆச்சிரியமான விசயமென்றால், அத்தகையவர் இத்தனை ஆண்டுகளில் ஒரு சாலை விபத்தை கூட ஏற்படுத்தவில்லை என்பது மற்றொரு ஆச்சிரியமானதாக விளங்குகிறது.
இத்தகைய ஆச்சிரியங்கள் அனைத்திற்கும் சொந்தகாரராக இந்த முதியவர் விளங்கினாலும், இவர் இத்தனை வருடங்களில் வாகனம் ஓட்டியது சட்டத்திற்கு புறம்பானது ஆகும். இவர் குறித்து புல்வெல் போலீஸ் நிலையத்தின் அதிகாரப்பூர்வ முகப்புத்தக பக்கத்தில், "அதிர்ஷ்டவசமாக அவர் ஒருபோதும் விபத்துக்குள்ளாகவில்லை, யாருக்கும் காயம் ஏற்படுத்தியதில்லை.
மேலும் காப்பீடு இல்லாத வாகனங்களை பயன்படுத்துவோரை தாக்கி யாரையும் பொருளாதார ரீதியாக இழக்க செய்ததில்லை!" என பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட போலீஸாரின் இந்த ஃபேஸ்புக் பதிவில், "நாட்டிங்ஹாமில் ஏ.என்.பி.ஆர் கேமிராக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சிறிய பயணங்களில் கூட நீங்கள் கேமிராவில் பதிவாகும் வாய்ப்பு உள்ளது.
எனவே உங்கள் ஆவணங்கள் ஒழுங்காக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்... இல்லையேல் சிக்குவீர்கள்... ஒருநாள்" என மற்ற வாகன ஓட்டிகளையும் எச்சரிக்கும் விதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றப்படி சுமார் 70 வருடங்களுக்கு பிறகு சிக்கியுள்ள இந்த 83 வயதான முதியவருக்கு எத்தகைய தண்டனை & அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன என்பதை பற்றிய விபரங்கள் எதுவும் பதிவிடப்படவில்லை.
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இத்தனை வருடங்களாக வாகனங்களை ஓட்டியதற்காக மற்றும் காப்பீடு இல்லாத வாகனத்தை ஓட்டியதற்காக இவர் மீது பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வயதும் 83-ஐ எட்டிவிட்டதால், இவருக்கு வாழ்நாள் முழுவதும் வாகனங்களை ஓட்டுவதற்கான தடையும் விதிக்கப்படலாம்.
ஆனால் உண்மையில், முறையான ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளவர்களே அவ்வப்போது சிறு சிறு சாலை விபத்துகளை சந்தித்துவரும் நிலையில், இந்த முதியவர் சுமார் 70 வருடங்களாக லைசன்ஸ் வைத்தில்லாமலேயே சாலை விபத்து எதையும் செய்ததில்லை என்பது மிகுந்த ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இதில் இருந்து இவர் டிரைவிங்கில் அனுபவத்தின் வாயிலாக நன்கு பயிற்சி பெற்றுள்ளார் என்பதை அறிய முடிகிறது.
சாலை விபத்து எதையும் மேற்கொள்ளாதது, இவர் இத்தனை வருடங்களாக போலீஸாரிடம் சிக்காமல் இருந்ததற்கு மிக முக்கிய காரணமாகும். ஏனெனில் ஒரு சாலை விபத்தை மேற்கொண்டிருந்தாலே இங்கிலாந்து போலீஸார் இவரது ஜாதகத்தை அறிந்திருப்பர், இவரும் அப்போதே மாட்டியிருப்பார். இத்தகைய மனிதரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்... கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக