டெஸ்ட் ட்ரைவ் -இன் போது திருடப்பட்ட டாடா அல்ட்ராஸ் கார் ஒன்று சில நிமிடங்களில் மீண்டும் அதே ஷோரூமிற்கு கொண்டுவரப்பட்டிருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு நடந்தது? என்பது பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
ஒரு காலத்தில் காரில் ஏசி கொண்டுவரப்பட்டதே ஆச்சிரியமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் ஏகப்பட்ட நம்ப முடியாத அம்சங்கள் கார்களில் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையானவை பயணிகளின் பயண சவுகரியத்தை மேம்படுத்துபவையாக உள்ளன. அதேநேரம் சில அம்சங்கள் வாகனத்திற்கு பாதுகாப்பு வேலியாக அமைந்துள்ளன.
இத்தகைய அம்சங்களில் ஒன்று அழுத்து-பொத்தான் ஸ்டார்ட்/ ஸ்டாப் அமைப்பாகும். காரின் சாவியை வைத்துள்ளவர் ஸ்டேரிங் சக்கரத்திற்கு அருகே உள்ள ஒரு பொத்தானை அழுத்தினாலே போதும் காரின் என்ஜின் இயங்க ஆரம்பித்துவிடும். இது ஓட்டுனருக்கான வேலையை குறைப்பதாகவே பலர் கருதுகின்றனர். ஆனால் இது காரின் உரிமையாளருக்கு வாகன பாதுகாப்பிற்கான உறுதியையும் வழங்குவது பலருக்கு தெரிவதில்லை. கார் திருடர்களையும் சேர்த்துதான்.
அதாவது இப்போதைய மாடர்ன் காருக்குள் நுழைவது, காரை ஸ்டார்ட் செய்வது உள்ளிட்டவற்றிற்கு கீ-ஃபாப் தேவை. ஆதலால் ஒருவரிடம் இருந்து காரை திருடினால் மட்டும் போதாது. அவரிடம் இருந்து கீ-ஃபாப் ஐயும் எடுக்க வேண்டும். இது தெரியாமல் பலர் கார்களை திருடி மாட்டி கொண்டுள்ளனர். அவ்வாறான சம்பவம் ஒன்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த மாநிலத்தின் உஜைன் நகரில் உள்ள ஒரு டாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப் மையத்திற்கு இருவர் கார் வாங்குவது போல வந்துள்ளனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அல்ட்ராஸ் கார் ஒன்றினை சுற்றி பார்த்தவர்கள் இதனை வாங்குவதாகவும், இதில் டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்க வேண்டும் எனவும் டீலர்ஷிப் அதிகாரியுடன் தெரிவித்துள்ளனர். அவரும் விற்பனை நிர்வாகி ஒருவரை டெஸ்ட் ட்ரைவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த இருவர், ஒரு விற்பனை நிர்வாகி என மூவருடன் டெஸ்ட் ட்ரைவ் துவங்கியது. சிறிது தூர பயணத்திற்கு பிறகு காரில் பிரச்சனை உள்ளதாகவும், அது என்ன என்பதை பார்க்கும்படியும் நிர்வாகியிடம் அவர்கள் கூறியுள்ளனர். அவர் காரில் இருந்து கீழிறங்கிய அடுத்த கணமே அவரை விட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு அவர்கள் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் இந்த காரை தொடர்ந்து இயக்க கீ-ஃபாப் தேவை என்பதை அறிந்திருக்கவில்லை.
அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கீ-ஃபாப் வழங்குகிறது. இதனை டெஸ்ட் ட்ரைவ்களின் போது உஷாராக விற்பனை நிர்வாகி தான் வைத்திருப்பார். இந்த சம்பவத்திலும் காரில் இருந்து இறக்கப்பட்ட நிர்வாகியிடமே காருக்கான கீ-ஃபாப் இருந்துள்ளது. இதனை சற்று தொலைவிற்கு பின்பே அறிந்து கொண்ட அந்த திருடர்கள், காரை சாலையின் ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பியோடி உள்ளனர்.
இதற்குள்ளாக விற்பனை நிர்வாகி அளித்த தகவலின்படி டீலர்ஷுப் மையத்தின் சார்பில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுவிட்டது. அதன்பின் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அளித்த தகவலிற்கு இணங்க, சாலையில் அனாதையாக நிறுத்தப்பட்டிருந்த, திருடுப்போன அல்ட்ராஸ் காரை மீட்டு மீண்டும் டீலர்ஷிப் ஷோரூமிற்கே கொண்டுவந்துள்ளனர்.
கீ-ஃபாப் உடன் வழங்கப்படும் கார்களில் வெளியே சென்சார் ஒன்று வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட தூர இடைவெளிக்குள் கீ-ஃபாப் -இல் உள்ள பொத்தானை அழுத்தினால் தான் இந்த சென்சார்கள் வாயிலாக காரின் கதவுகள் அன்லாக் ஆகும். என்ஜின் ஆஃப் செய்யப்பட்ட காருக்குள் மீண்டும் நுழைய கீ-ஃபாப் தேவை. ஆனால் காருக்குள் இருந்து வெளியே வர கீ-ஃபாப் தேவைப்படாது.
இந்த ஒரு விஷயத்தில் தான் அந்த திருடர்கள் தப்பித்து சென்றுள்ளனர். காருக்குள் இருந்து வெளியே வரவும் கீ-ஃபாப் தேவை என்றால் அவர்கள் காருக்குள்ளே சிறைப்போல் சிக்கி கொண்டிருப்பர். அல்லது காரின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, காயங்களுடன் தப்பித்து சென்றிருப்பர். இவ்வாறு பல்வேறு அசத்தலான அம்சங்களை டாடா மோட்டார்ஸ் அல்ட்ராஸ் காரில் வழங்குகிறது.
டாடா மோட்டார்ஸின் பிரீமியம் ஹேட்ச்பேக் காராக விளங்கும் அல்ட்ராஸ் இந்திய சந்தையில் எக்ஸ்.இ, எக்ஸ்இ+, எக்ஸ்.எம்+, எக்ஸ்டி, எக்ஸ்.இசட், எக்ஸ்.இசட்(ஒ) மற்றும் எக்ஸ்.இசட்+ என்கிற 7 விதமான ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக