இந்த கோயில் எங்கு உள்ளது?
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாரபுரம் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திருப்பூரிலிருந்து சுமார் 46 கி.மீ தொலைவில் தாராபுரம் உள்ளது. தாராபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
அருள்மிகு காடு அனுமந்தராய சுவாமி திருக்கோயிலில் மூலவரின் முகமானது வடகிழக்கு திசையை நோக்கியும், பாதங்கள் வடக்கு திசையை நோக்கியும் அமைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள முக்கிய ஆஞ்சநேயர் ஆலயங்களில் இதுவும் ஒன்று.
இத்திருக்கோயிலின் மூலவரான காடு அனுமந்தராய சுவாமி ஏழு அடி உயரம், மூன்று அடி அகலத்துடனும், இடுப்பில் சலங்கைகள் கட்டப்பட்டும், வலது இடுப்பில் கத்தியும், கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலைகளும், வலது கை அபயஹஸ்தமாகவும், இடது கை சௌகந்திகாமலர் ஏந்திய நிலையிலும் காட்சியளிக்கிறார்.
மூலவரின் கிரீடத்தின் பின்புறத்தில் பட்டாகத்தியும், முகத்தின் வலதுபுறம் சக்கரமும், இடதுபுறம் சங்கும் உள்ளன. வாலில் மூன்று மணிகள் உள்ளன.
வேறென்ன சிறப்பு?
அருள்மிகு ஆஞ்சநேயர் வாயு என்ற காற்றின் வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். இதன் காரணமாக மூலஸ்தானத்தின் மேல் கூரையில் எப்போதும் காற்று உள்ளே நுழைந்து வெளியே செல்லும் வகையில் திறந்த நிலையிலேயே காணப்படும்.
இந்தக் கோயில் கட்டிய இடம் காட்டுப்பகுதியாக இருந்ததால் இத்திருக்கோயிலுக்கு அருள்மிகு காடு அனுமந்தராய சுவாமி திருக்கோயில் என்ற பெயர் உண்டானது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
அருள்மிகு காடு அனுமந்தராய சுவாமி திருக்கோயிலில் அனுமன்ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
இத்தலத்தில் வழிபட மண் மற்றும் நீர் சார்ந்த வழக்குகளில் நல்ல தீர்வு கிடைக்கும்.
இத்திருக்கோயிலில் உள்ள அனுமந்தராய சாமியை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்க முடியும்.
நினைத்த காரியம் நிறைவேற இத்தலத்திலுள்ள ஆஞ்சநேயரை வழிபடலாம்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்தலத்திலுள்ள ஆஞ்சநேயரிடம் வேண்டியவை நிறைவேறியவுடன் வடைமாலை அணிவித்தும், வெற்றிலை மாலை சாற்றியும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக